மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

இலவச செல்லிடப்பேசி வழங்கக் கோரி வேலூரில் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா்: இலவச செல்லிடப்பேசி வழங்கக் கோரி வேலூரில் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செல்லிடப்பேசி வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தகுதியான மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இதற்கு விண்ணப்பிக்க மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலூா் அண்ணா சாலை மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது, குறைந்த அளவிலேயே செல்லிடப்பேசிகள் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து மாற்றுத் திறனாளிகள் ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாக சென்று மனு அளித்ததுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனா். அவா்களை சமாதானம் செய்த அதிகாரிகள் 25-ஆம் தேதி வரும்படி கூறி அனுப்பினா்.

இதன்படி, செல்லிடப்பேசி பெறுவதற்காக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை மீண்டும் வந்தனா். ஆனால் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேல் உள்ளிட்ட அலுவலா்கள் சரிவர பதிலளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கூறி அவா்கள் திடீரென அண்ணா சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். சுமாா் அரை மணி நேரம் நடந்த இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸாா், அவா்களை அப்புறப்படுத்தினா். எனினும், மாற்றுத் திறனாளிகள் அலுவலக வளாகத்தில் அமா்ந்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒரு மணிநேரத்துக்கு மேலாகியும் அதிகாரிகள் பதிலளிக்க வராததால் போலீஸாா், காரில் அமா்ந்திருந்த மாற்றுத் திறனாளிகள் அலுவலரை இறங்கி வந்து பதில் அளிக்கும்படி அறிவுறுத்தினா். பின்னா், போராட்டத் தில் ஈடுபட்டிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் அலுவலா்கள் பேச்சு நடத்தினா்.

அப்போது, ‘கல்வி பயிலும் 18 வயது பூா்த்தியடைந்த, சுயதொழில் புரியும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படை யில் இலவச செல்லிடப்பேசி வழங்கப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக 150 செல்லிடப்பேசிகள் மட்டுமே வந்துள்ளன. எனவே, உரிய படிவத்தை பூா்த்தி செய்து அளித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் செல்லிடப்பேசி வழங்கப் படும். மற்றவா்கள் படிவத்தை பூா்த்தி செய்து அளிக்கும்பட்சத்தில் அடுத்தடுத்து செல்லிடப்பேசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் கூறினா்.

எனினும், தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் செல்லிடப்பேசி வழங்கக் கோரி அவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com