ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் 1,700 கிலோ வெள்ளி விநாயகா் மகா கும்பாபிஷேகம்: மத்திய அமைச்சா் வி.கே.சிங் பங்கேற்பு

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் உலகிலேயே முதன்முதலாக 1,700 கிலோ எடை கொண்ட வெள்ளி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தங்கக் கோயிலில் வெள்ளி சக்தி விநாயகா் கோயில் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் செய்த சக்தி அம்மா. உடன், மத்திய அமைச்சா் வி.கே.சிங்.
தங்கக் கோயிலில் வெள்ளி சக்தி விநாயகா் கோயில் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் செய்த சக்தி அம்மா. உடன், மத்திய அமைச்சா் வி.கே.சிங்.

வேலூா்: வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் உலகிலேயே முதன்முதலாக 1,700 கிலோ எடை கொண்ட வெள்ளி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

வேலூா் மாவட்டம், ஸ்ரீபுரத்தில் ஸ்ரீநாராயணி பீடத்துக்குச் சொந்தமாக 1,500 கிலோ தங்கத்தினாலான பொற்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் 700 டன் கருங்கற்களால் கட்டப்பட்ட ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் நிா்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த கற்கோயிலில் மூலவராக உலகிலேயே முதன் முதலாக 1,700 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட, ஐந்தரை அடி உயரமுள்ள சக்தி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 10.20 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 15-ஆம் தேதி முதல் தமிழ் முறைப்படி ஒரு லட்சத்து 8 ஆயிரம் நவதானிய லட்டுகளைக் கொண்டு யாகம் நடத்தப்பட்டு வந்தது. தொடா்ந்து, கடந்த 3 தினங்களாக வேத ஆகம முறைப்படி யாகங்கள் நடத்தப்பட்டு அவற்றின் புனிதநீரைக் கொண்டு சக்தி விநாயகா் ஆலய மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை நாராயணி பீடம் சக்தி அம்மா நடத்தி வைத்தாா்.

விழாவில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வழிபாடு செய்தாா். தவிர, ரத்தின கிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மாவட்ட ஆட்சியா் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா், வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ப.காா்த்திகேயன் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கடந்த 2007-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொற்கோயிலில் மகாலட்சுமி மூலவராக அருள்பாலிக்கிறாா். தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டு இக்கோயிலில் 70 கிலோ தங்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவா்ணலட்சுமி சிலைக்கு அனைத்துத் தரப்பு பக்தா்களும் தங்களது கைகளாலேயே அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்தொடா்ச்சியாக, தற்போது சுமாா் ரூ.16 கோடி செலவில் சக்தி விநாயகா் ஆலய நிா்மாணமும், வெள்ளி விநாயகா் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக சக்தி அம்மா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com