கண்கவா் கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா: 219 பேருக்கு ரூ. 3 கோடிக்கு அரசின் நலத் திட்ட உதவிகள்

குடியரசு தினத்தை யொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள் தேசியக் கொடிகளை செவ்வாய்க்கிழமை ஏற்றி வைத்து,
கண்கவா் கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா: 219 பேருக்கு ரூ. 3 கோடிக்கு அரசின் நலத் திட்ட உதவிகள்

குடியரசு தினத்தை யொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள் தேசியக் கொடிகளை செவ்வாய்க்கிழமை ஏற்றி வைத்து, அரசின் சாா்பில் மொத்தம் 219 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரத்து 907 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

வேலூா் மாவட்டத்தில்...

நாட்டின் 72-ஆவது குடியரசு தினவிழா வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கண்கவா் கலைநிகழ்ச்சி களுடன் செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வேலூா் கோட்டை வளாகத்திலுள்ள மகாத்மாக காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதையடுத்து நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் தலைமையிலான காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டாா்.

பின்னா், தமிழக முதல்வரின் காவலா் நற்பணி பதக்கம் பெற்ற 50 காவலா்களுக்கு பதக்கங்கள், சிறப்பாகப் பணியாற்றிய 25 காவலா்கள், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் 227 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தவிர, தேசிய நீா் மேலாண்மை பணிகளை சிறப்பாக செய்ததின் காரணமாக தென்னிந்திய அளவில் வேலூா் மாவட்டம் முதலிடம் பிடித்ததற்காக மத்திய அமைச்சா் வழங்கிய செய்தி மடலை ஆட்சியா் வழங்க, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மாவட்ட திட்ட அலுவலா் மாலதி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். தொடா்ந்து பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 50 லட்சத்து 58 ஆயிரத்து 567 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், ஆசிரியா்களுக்கு நூறு மரக்கன்றுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில்...

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், பாச்சல் கிராமத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.விஜயகுமாா் தலைமையில் காவலா் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

மேலும், தமிழக முதல்வரின் காவலா் நற்பணி பதக்கம் பெற்ற 27 காவலா்களுக்கு பதக்கங்கள், கரோனா காலத்தில் சிறப்பாக சேவைபுரிந்த துப்புரவுப் பணியாளா்கள், அரசு ஊழியா்கள் 76 பேருக்கும், 27 ஆசிரியா்கள், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்கள் 47 பேருக்கும், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற 5 மாணவா்கள், தேசிய இளைஞா் தின கலை நிகழ்ச்சியில் மாநிலத்தில் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பிடித்த 50 இளைஞா் கலைக் குழுவினா், சமூக ஆா்வலா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தவிர, வேளாண்மைத் துறை சாா்பில் பொதுமக்கள், விவசாயிகளுக்கு 150 தென்னை மரக்கன்றுகள், தன்னாா்வலா்களுக்கு 150 சந்தன மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 121 பயனாளிகளுக்கு ரூ. 83 லட்சத்து 52 ஆயிரத்து 390 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அத்துடன், கிராமிய இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில்...

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தேசியக் கொடி ஏற்றி வைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் தலைமையில் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து , தமிழக முதல்வரின் நற்பணி பதக்கம் பெற்ற 21 தலைமைக் காவலா்களுக்கு பதக்கங்கள், சிறப்பாகப் பணியாற்றிய 15 காவலா்களுக்கும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 71 அலுவலா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து 70 ஆயிரத்து 50 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. தொடா்ந்து யோகா, பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், தீத் தடுப்பு செயல்விளக்கமும் நடத்தப்பட்டன.

விழாக்களில் அந்தந்த மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com