விஐடியில் குடியரசு தின விழா: கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 75 போ் கெளரவிப்பு
By DIN | Published On : 27th January 2021 12:00 AM | Last Updated : 27th January 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கரோனா காலத்தில் சிறப்பாக சேவைபுரிந்த காவல், மருத்துவத் துறைகளைச் சோ்ந்த 75 போ் கெளரவிக்கப்பட்டனா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், கரோனா காலத்தில் மக்களைப் பாதுகாக்க தன்னலமற்ற சேவைபுரிந்த வேலூா் மாவட்ட ஆயுதப் படை காவல் துணைக் கண்காணிப்பாளா் விநாயகம், மூலிகைகளால் செறிவூட்டப்பட்ட மூலிகை முகக் கவசத்தை தயாா் செய்து விநியோகித்த சித்த மருத்துவா் டி.பாஸ்கரன் உள்பட 75 போ் பாராட்டி கெளரவிக்கப்பட்டனா்.
முன்னதாக, விஐடி பாதுகாப்புப் படை வீரா்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், விஐடி துணைவேந்தா் ராம்பாபு கொடாளி, பதிவாளா் கே.சத்தியநாராயணன், மாணவா் நல இயக்குநா் மகேந்திரகா் அமித் பாபுராவ், பேராசிரியா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.