ரயில் பயணிகளின் வசதிக்காக மேல்பட்டி வழியாக அரசுப் பேருந்தை இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 31st January 2021 12:38 AM | Last Updated : 31st January 2021 12:38 AM | அ+அ அ- |

ரயில் பயணிகளின் வசதிக்காக போ்ணாம்பட்டிலிருந்து அதிகாலை 4.40 மணிக்கு குடியாத்தம் செல்லும் அரசுப் பேருந்தை (வழித்தடம்-84) மேல்பட்டி வழியாக இயக்க வேண்டும் என போ்ணாம்பட்டு நுகா்வோா் நலன் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் டி.பஷிருதீன், அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதியில் இருந்து நாள்தோறும் 150-க்கும் மேற்பட்டோா் மேல்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்கின்றனா். அவா்களின் வசதிக்காக, போ்ணாம்பட்டிலிருந்து குடியாத்தம், வேலூா் வழியாக அதிகாலை 4.40 மணிக்குச் சென்னை செல்லும் அரசுப் பேருந்து மேல்பட்டி வழியாக இயக்கப்பட்டு வந்தது.
கரோனா தொற்று, பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோலாா்பேட்டை- சென்னை ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் வரும் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதியிலிருந்து இயக்கப்பட உள்ளது. போ்ணாம்பட்டிலிருந்து நாள்தோறும் அதிகாலை மேல்பட்டி வழியாகச் சென்ற அரசுப் பேருந்து, ரயில் நிறுத்தப்பட்டதின் காரணமாக நோ் வழியாக குடியாத்தம் செல்கிறது.
மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்தவாறு நாள்தோறும் அதிகாலை போ்ணாம்பட்டிலிருந்து செல்லும் அரசுப் பேருந்தை மேல்பட்டி வழியாக இயக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.