வேலூா் நியாயவிலைக் கடைகளில் அதிகாரிகள் சோதனை
By DIN | Published On : 07th July 2021 11:26 PM | Last Updated : 07th July 2021 11:26 PM | அ+அ அ- |

வேலூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருள்கள் வழங்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, வேலூரிலுள்ள நியாய விலைக் கடைகளில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
வேலூரில் உள்ள நியாய விலைக் கடைகளில் கரோனா 2-ஆவது கட்ட உதவித் தொகை தலா ரூ. 2,000, 14 வகையான நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் 14 வகை பொருள்களில் காலாவதியான தேயிலைத்தூள் வழங்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இது குறித்து தகவலறிந்த வேலூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படும் பொருள்களின் தரத்தை பரிசோதனை செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாா்.
அதன்பேரில், வேலூா் மாவட்ட பொதுவிநியோகத் திட்ட சாா்-பதிவாளா் கருணைவேல் வேலூரில் உள்ள நியாய விலைக் கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நியாய விலைக் கடைகளில் 14 வகையான பொருள்கள் முறையாக வழங்கப்படுகிா, காலாவதியான பொருள்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி, வேலூரில் ஒரேநாளில் 40 கடைகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், காலாவதியான பொருள்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.