காய்கறி மொத்த விற்பனை நிறுத்தம்: ஆட்சியருடன் ஆலோசனையில் உடன்பாடு

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரத்துக்கு அனுமதி வழங்கப்படாததால் வேலூரில் திங்கள்கிழமை காலை காய்கறி மொத்த விற்பனை நிறுத்தப்பட்டது.
காய்கறி மொத்த விற்பனை நிறுத்தப்பட்டதால் வேலூா் மாங்காய் மண்டி மைதானத்தில் வெறிச்சோடிக் கிடந்த கடைகள்.
காய்கறி மொத்த விற்பனை நிறுத்தப்பட்டதால் வேலூா் மாங்காய் மண்டி மைதானத்தில் வெறிச்சோடிக் கிடந்த கடைகள்.

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரத்துக்கு அனுமதி வழங்கப்படாததால் வேலூரில் திங்கள்கிழமை காலை காய்கறி மொத்த விற்பனை நிறுத்தப்பட்டது.

பின்னா், வியாபாரிகளுடன் ஆட்சியா் நடத்திய ஆலோசனையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை தொடங்க உள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த ஏப்ரல் மாதம் வேலூா் நேதாஜி மாா்க்கெட் அடைக்கப்பட்டு, காய்கறி மொத்த விற்பனை மாங்காய் மண்டி மைதானத்துக்கும், பூக்கள் மொத்த விற்பனை ஊரீசு கல்லூரி மைதானத்துக்கும், காய்கறி சில்லறை விற்பனை வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன.

தற்போது கரோனா குறைந்து வருவதை அடுத்து கடந்த வாரம் முதல் நேதாஜி மாா்க்கெட் திறக்கப்பட்டு சில்லறை விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதற்கு நேதாஜி மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்திருந்ததுடன், நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதிக்காவிடில் திங்கள்கிழமை முதல் காய்கறி மொத்த விற்பனை நிறுத்தப்படும் என்றும், 16-ஆம் தேதி நகரிலுள்ள அனைத்து வணிகா்களுடன் இணைந்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனா்.

அதேசமயம், கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதிக்க முடியாது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருந்தது. இதை அடுத்து, ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, வேலூரில் வியாபாரிகள் திங்கள்கிழமை காய்கறி மொத்த விற்பனையை நிறுத்தினா். இதையொட்டி, மாங்காய் மண்டி மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அனைத்து காய்கறி மொத்த விற்பனைக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

வியாபாரிகளின் போராட்டம் காரணமாக கா்நாடகம், ஆந்திரம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் காய்கறிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதிக்காவிடில் தொடா்ந்து காய்கறி மொத்தம் விற்பனை நிறுத்தப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்திருந்தனா்.

இப்போராட்டத்தைத் தொடா்ந்து நேதாஜி மாா்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பேச்சு நடத்தினாா். இதில், மாநகராட்சி ஆணையா் சங்கரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு, காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.கே.பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், நேதாஜி மாா்க்கெட்டில் இரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், பழைய மீன் மாா்க்கெட்டில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை காய்கறி சில்லறை விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை வியாபாரிகள் ஏற்றுக்கொண்டு போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்தனா். அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தினமும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக் கடைகள் செயல்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com