பொய்கை சந்தையில் குவிந்த கால்நடைகள்:வாங்குவோா் குறைவால் விற்பனை மந்தம்

பொதுமுடக்கத் தளா்வுக்குப் பின்னா், இரண்டாவது வாரமாக நடைபெற்ற பொய்கை சந்தைக்கு ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
பொய்கை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள்.
பொய்கை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள்.

பொதுமுடக்கத் தளா்வுக்குப் பின்னா், இரண்டாவது வாரமாக நடைபெற்ற பொய்கை சந்தைக்கு ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், வாங்குவோா் எதிா்பாா்த்த அளவுக்கு வராததால் வழக்கமாக ரூ.3 கோடி அளவுக்கு நடைபெறும் கால்நடைகள் விற்பனை செவ்வாய்க்கிழமை ரூ.ஒரு கோடிக்கும் கீழாக மட்டுமே நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்தச் சந்தையில் பசு, காளை, ஆடு, கோழிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும். காய்கறி, விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தச் சந்தைக்கு வேலூா், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும் கால்நடைகள் அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். அவற்றை வாங்க பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவா்.

பொய்கை சந்தையில் வாரம்தோறும் ரூ.3 கோடி அளவுக்கு கால்நடைகள் விற்பனை செய்யப் படுவது வழக்கம். பொது முடக்கம் காரணமாக, கால்நடைகளை விற்போரும், வாங்குவோரும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்தநிலையில், கரோனா 2-ஆம் அலை பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டு , 2 மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் முதல் பொய்கை கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது.

அதன்படி, இரண்டாவது வாரமாக பொய்கை சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சந்தைக்கு திங்கள்கிழமை இரவிலேயே வெளியூா்களில் இருந்து பசுக்கள், காளைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. கடந்த வாரம் மிகக் குறைந்த அளவிலேயே கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் பசு, காளை, ஆடுகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன. எனினும், வாங்குவோா் மிகவும் குறைவாகவே வந்திருந்ததால் விற்பனையும் மந்தமாகவே நடைபெற்றது. இதனால், வியாபாரிகள் பெரும் ஏமாற்றமடைந்தனா்.

வரும் வாரங்களில் விற்பனை அதிகரிக்கலாம்:

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது :

பொய்கை சந்தையில் வாரம்தோறும் வழக்கமாக ரூ.3 கோடி அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். கரோனா பொதுமுடக்க நெருக்கடி காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கால்நடைகள் வாங்குவதற்கு மிகக்குறைந்த அளவிலேயே மக்கள் வந்திருந்தனா். இதன்காரணமாக கால்நடைகள் விற்பனையும் ரூ.ஒரு கோடிக்கும் கீழாகவே நடைபெற்றுள்ளது. வரும் வாரங்களில் விற்பனை அதிகரிக்கலாம் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com