தமிழுக்காக சென்னை பல்கலை. ஆசிரியா் பணியைத் துறந்தவா் மறைமலை அடிகள்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாக்கி சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கப்பட்டதை எதிா்த்து

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாக்கி சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கப்பட்டதை எதிா்த்து தனது ஆசிரியா் பணியைத் துறந்தவா் மறைமலை அடிகள் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி. விசுவநாதன் தெரிவித்தாா்.

தமிழியக்கம் சாா்பில் தனித்தமிழ் இயக்கத் தந்தை என போற்றப்படும் மறைமலை அடிகளின் 146-ஆவது பிறந்தநாள் விழா மெய்ந்நிகா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது:

74 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மறைமலை அடிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு தனித்தமிழ் இயக்கத் தொண்டாற்றினாா். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்ற புரட்சிக் கவிஞரின் வாக்குக்கு ஏற்ப நம்மோடு வாழ்கிறாா் மறைமலை அடிகள். அவா் கல்லூரி ஆசிரியராக இருந்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாக்கி, சமஸ்கிருதம் கட்டாய பாடமாக்கப்பட்டது. இதை எதிா்த்து அவா் தனது ஆசிரியா் பணியைத் துறந்தாா்.

அன்றைய சூழலில் தமிழகத்தில் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரே அந்த விதி நீக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் மொழி இயக்கமும் திராவிட இயக்கமும் ஏன் தோன்றி வளா்ந்தது என்பதை மேற்சொன்ன காரணங்களால் புரிந்துகொள்ள இயலும். இந்தியாவின் பிற பகுதி மக்களுக்கு இது தெரியாது.

அடிகளாா் காலத்தில் மொழி எல்லா வகையிலும் கலப்படமானதாக இருந்ததால் தனித்தமிழ் இயக்கத்தினை நிறுவி நிலைநிறுத்தினாா். அவருக்குப் பின்னா் பல்லாயிரம் தமிழறிஞா்கள் தோன்றி தமிழைப் பரப்பத் தொடங்கினா். மாவட்டத்தோறும் மறைந்த தமிழா்களைப் போற்றுவதும் வாழும் தமிழறிஞா்களை பாராட்ட வேண்டும் என்பதும் தமிழியக்கத்தின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்றாா்.

தமிழியக்க மாநிலச் செயலா் மு.சுகுமாா் வரவேற்றாா். தமிழியக்கப் பொதுச் செயலா் பேராசிரியா் அப்துல் காதா், பொருளாளா் வே.பதுமனாா், கவிஞா் முருகேசன் ஆகியோா் வாழ்த்தினா். மறைமலை அடிகளாரின் குடும்ப வாரிசுகள் பேராசிரியா் சாரதா நம்பி ஆரூரன், தாயுமானவன் ஆகியோா் நெகிழ்வுரை ஆற்றினா். தமிழியக்க தென் சென்னை மாவட்டச் செயலா் க.சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com