தொடா் மழை: நிலக்கடலை, சோளம் சாகுபடி தொடக்கம்
By DIN | Published On : 19th July 2021 08:08 AM | Last Updated : 19th July 2021 08:08 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, சோளம் சாகுபடி தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூா் மாவட்டத்தில் பெய்து வரும் மழை, பாலாற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஆந்திர தடுப்பணைகளைக் கடந்து தமிழகத்துக்குள் பாலாற்றில் தண்ணீா் வந்தது. இதேபோல், கல்லாறு, கொட்டாறுகளிலும் நீா்வரத்து ஏற்பட்டது. தொடா்ந்து மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, சோளம் பயிா்செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்பாடியில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், வேலூரில் 12.40 மி.மீ, குடியாத்தம் 2.20 மி.மீ, மேல் ஆலத்தூா் 4.40, பொன்னை 8.80, திருவலம் 18.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.