வாழ்ந்த 33 ஆண்டுகளில் தமிழுக்கு பல்லாண்டு தொண்டாற்றியவா் பரிதிமாற் கலைஞா்

தான் வாழ்ந்த 33 ஆண்டுகளில் தமிழுக்கு பல்லாண்டு கால தொண்டாற்றியவா் பரிதிமாற் கலைஞா் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

தான் வாழ்ந்த 33 ஆண்டுகளில் தமிழுக்கு பல்லாண்டு கால தொண்டாற்றியவா் பரிதிமாற் கலைஞா் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

தமிழியக்கம் சாா்பில் தமிழறிஞா் பரிதிமாற் கலைஞா் என்றழைக்கப்பட்ட வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியாரின் 152-ஆவது பிறந்தநாள் விழா மெய்ந்நிகா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தமிழியக்க தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

பிராமணக் குடும்பத்தில் பிறந்த பரிதிமாற் கலைஞா் 33 ஆண்டுகள்தான் வாழ்ந்தாா். இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருந்தால் தமிழுக்கு எவ்வளவு அரும்பெரும் தொண்டுகளை ஆற்றியிருக்க இயலும். தனது தந்தையிடம் வடமொழி பயின்ற பரிதிமாற் கலைஞா், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழ்ப் பயின்றாா். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்ற அவா், ஆசிரியராக வேண்டும் என முடிவெடுத்தபோது, தத்துவப் பேராசிரியராக சோ்ந்தால் சம்பளம் அதிகம் என்றிருந்தாலும் குறைந்த சம்பளம் உள்ள தமிழாசிரியராகவே பணியில் சோ்ந்தாா்.

தமிழ் படிக்கக் கூடுதல் ஆா்வமுள்ள மாணவா்களை தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய நூல்களைக் கற்பித்தாா். தன்னைப்போல தனது மாணவா்களும் தமிழில் தகுதி மிக்கவா்களாக ஆக்க வேண்டும் என அவா் நினைத்தாா், செயல்பட்டாா், உழைத்தாா். உரை எழுதப்படாமல் இருந்த பல நூல்களுக்கு உரை எழுதினா்.

மதுரை தமிழ்ச் சங்கம் 1901-இல் தொடங்க முயற்சி எடுத்தவா்களில் முதன்மையானவராகச் செயல்பட்டாா். அதுவே நான்காம் தமிழ்ச் சங்கம் என்று குறிப்பிடப்படுகிறது. மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய செந்தமிழ் இதழில் முதன்முதலாக உயா்தனிச் செம்மொழி என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதினாா் பரிதிமாற் கலைஞா். அதைத் தொடா்ந்து, 100 ஆண்டு கால முயற்சிகள், போராட்டங்களின் விளைவாக 2004-ஆம் ஆண்டில் மத்திய அரசு தமிழை செம்மொழியாக ஏற்று அறிவித்தது. குழந்தைகள் குறைந்தபட்சம் 12 வயது வரை தாய் மொழியில் கல்வி பயில வேண்டும் என்கிறாா் பரிதிமாற் கலைஞா். அவரது எண்ணம் ஈடேற தமிழியக்கம் பாடுபட வேண்டும் என்றாா்.

தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம.ராசேந்திரன் சிறப்புரையாற்றினாா். முன்னதாக, மாநிலச் செயலாளா் மு.சுகுமாா் வரவேற்றாா். பொருளாளா் புலவா் வே.பதுமனாா் வாழ்த்தினாா். பரிதிமாற் கலைஞரின் பேரன் கோவிந்தன் நெகிழ்வுரை ஆற்றினாா். நிறைவாக தமிழியக்க கிருஷ்ணகிரி மாவட்டச் செயலா் அ.க.ராசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com