கருப்புப் பூஞ்சை: தமிழகத்துக்கு 30 ஆயிரம் மருந்து குப்பிகள் அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளித்திட தமிழகத்துக்கு 30 ஆயிரம் மருந்துக் குப்பிகள் அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளித்திட தமிழகத்துக்கு 30 ஆயிரம் மருந்துக் குப்பிகள் அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று இடங்களில் கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிகிச்சை பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது - தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கடந்த காலங்களில் நாளொன்றுக்கு 230 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் தேவையை கடந்து தற்போது 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் வைத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தடுப்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் வியாழக்கிழமை மட்டும் 24,500 பேர் புதிதாக பாதிக்கப் பட்டுள்ளனர். 32 ஆயிரம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேசமயம், கருப்புப் பூஞ்சை நோய்க்கு தமிழகம் முழுவதும் இதுவரை 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், வேலூரில் மட்டும் 83 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 
அவர்களுக்கு சிகிச்சை அளித்திட தற்போது 1,790 மருந்துக் குப்பிகள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் பற்றாக்குறை என்பதால் தமிழகத்துக்கு 30 ஆயிரம் மருந்து குப்பிகள் ஒதுக்கீடு செய்திட மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.

இதேபோல், கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்திட இதுரை ஒரு கோடியே ஒரு லட்சம் தடுப்பூசிகள் வரப்பெற்று 95 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தேவையான அளவு கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்திட செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வேலூர் மாவட்டத்தல் 15 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு இதுவரை கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், மாநிலத்திலேயே அதிகளவில் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாவட்டமாக வேலூர் முதலிடம் வகிக்கிறது என்றார்.

பின்னர், கணியாம்பாடி எஸ்எஸ் மஹாலிலும், பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்ததுடன், பொய்கையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு பகுதியையும் பார்வையிட்டார். ஆய்வின்போது, தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மக்களவை உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிர்ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ப.கார்த்திகேயன் (வேலூர்), அமலுவிஜயன் (குடியாத்தம்), எம்.ஜெகன்மூர்த்தி (கே.வி.குப்பம்), மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com