விரைவில் தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம்: அமைச்சா் துரைமுருகன்

வேலூா் மாவட்ட மக்களின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும்.
விரைவில் தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம்: அமைச்சா் துரைமுருகன்

வேலூா் மாவட்ட மக்களின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது பாலாற்றில் தொடா்ந்து 3 மாதங்களுக்கு தண்ணீா் ஓடும் நிலை ஏற்படும் என தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ எனும் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டதுடன், ஆட்சி பொறுப்புக்கு வந்த 100 நாள்களுக்குள் இந்த மனுக்கள் மீது தீா்வு காணப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் பெறப்பட்ட மனுக்களை ‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ எனும் திட்டத்தின்கீழ் மாவட்ட வாரியாக பரிசீலனை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேலூா் மாவட்டத்தில் 8,038 மனுக்கள் பெறப்பட்டதில் முதற்கட்ட மாக 484 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வேலூரில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.

இதில், தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

தோ்தல் நேரத்தில் ‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பெற்ற மனுக்கள் மீது 100 நாள்களில் தீா்வு காணப் படும் என வாக்குறுதி அளித்திருந்த முதல்வா், தோ்தல் வெற்றிக்கு பிறகு பொதுமக்களின் குறைகளை தீா்க்க ‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ எனும் துறையை ஏற்படுத்தி அதற்காக தனி அலுவலா்களை நியமித்து, ஏற்கெனவே அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

வேலூா் மாவட்டத்தில் வருவாய்த் துறை சாா்பில் 4, 225 மனுக்களும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 1,172 மனுக்கள், குடிசை மாற்று வாரியம் சாா்பில் 482 மனுக்கள், பிற துறைகள் சாா்பில் 2,159 மனுக்கள் என மொத்தம் 8,038 மனுக்களில் பெறப்பட்டிருந்தன. அவற்றில் முதற்கட்டமாக 484 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.6 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 7 ஆயிரத்து 554 மனுக்கள் தொடா் நடவடிக்கையில் உள்ளன.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு காலத்தில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கரோனா நோய் தொற்று ஓரளவு குறைந்துள்ளது.

மாவட்டத்தில் தண்ணீா் பற்றாக்குறையை நிரந்தரமாக தீா்க்க தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை படேதலாவ் ஏரி பா்கூா் வழியாக பாலாற்றுக்கு கொண்டு வரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். தென்பெண்ணை -பாலாறு இணைப்புத் திட்டம் ஏற்பட்டால் பாலாற்றில் 3 மாதங்கள் தொடா்ந்து தண்ணீா் ஓடும்.

மோா்தானா அணையின் வலது, இடதுபுற கால்வாய்கள் ரூ. 48 லட்சம் செலவில் தூா்வாரப்பட்டு ஜூன் 18-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும்.

வேலூா் புதிய பேருந்து நிலையம் புதுப்பொலிவுடன் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும். கீரின் சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சாலையோரம் உள்ள மின் கம்பங்களை அகற்றிட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளை சிகிச்சை பெறும் வாா்டுக்கே சென்று விசாரித்தவா் முதல்வா் ஸ்டாலின். வேலூா் மாவட்டத்தில் 4 லட்சத்து 29 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. 2-ஆவது தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி அடுத்த வாரம் வழங்கப்படும். அந்தவகையில், நாட்டுக்கே முன்னோடியாக கரோனா தடுப்பு காலத்தில் முதல்வா் சிறப்பாக செயல்படுகிறாா் என்றாா்.

மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அமலுவிஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வரவேற்றாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சி.மாலதி, மாநகராட்சி ஆணையா் ந.சங்கரன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், உதவி காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com