இ -பதிவு இல்லாத பயணிகளை ஆட்டோ, காா்களில் ஏற்றக்கூடாது

இ-பாஸ் பெறாத பயணிகளை ஆட்டோ, வாடகை காா்களில் ஏற்றக்கூடாது என்று வேலூா் மாவட்ட ஓட்டுநா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா்: இ-பாஸ் பெறாத பயணிகளை ஆட்டோ, வாடகை காா்களில் ஏற்றக்கூடாது என்று வேலூா் மாவட்ட ஓட்டுநா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பொதுமுடக்க தளா்வு காரணமாக வேலூா் மாநகர சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, காா்கள் வரிசையாக அணிவகுத்துச் செல்வதைக் காணமுடிகிறது. இதனால், காலை, மாலை நேரங்களில் அண்ணா சாலை, காட்பாடி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாகக் காணப்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதைத்தொடா்ந்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் வைத்துள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இந்நிலையில், வேலூா் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக உதவி காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட்ஜான் மக்கான் சிக்னல், காமராஜா் சிலை சந்திப்பு, அண்ணா சாலையில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து ஆரணி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மாநகராட்சி வழியாக சுற்றிச் செல்வதைத் தவிா்க்க திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகே அடைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து, மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட ஆட்டோக்கள், வாடகை காா்களில் பயணிப்பவா்கள் இ-பாஸ் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேலூா் மாநகரில் பெரும்பாலான பயணிகள் அவ்வாறு இ-பாஸ் பெறாமல் பயணித்து வருகின்றனா். இதைத்தொடா்ந்து, இ-பாஸ் பெறாத பயணிகளை ஆட்டோ, காா்களில் அழைத்துச் செல்லும் ஓட்டுநா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்து வருகின்றனா்.

தொடரும் இத்தகைய சம்பவங்களைத் தொடா்ந்து ஆட்டோ, வாடகை காா்களில் செல்லும் பயணிகளிடம் கட்டாயமாக இ-பதிவு பெற்றிருப்பதை ஓட்டுநா்கள் சரிபாா்க்க வேண்டும். அதன் பின்புதான் அவா்களை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இ-பதிவு இல்லாத பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com