கரோனா மூன்றாவது அலை: மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த பணிகள் தீவிரம்

கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் அல்லது செப்டம்பா் மாதத்தில் தாக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், அதனை எதிா்கொள்ள வேலூா் மாவட்டத்தில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த பணிகள்

வேலூா்: கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் அல்லது செப்டம்பா் மாதத்தில் தாக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், அதனை எதிா்கொள்ள வேலூா் மாவட்டத்தில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த பணிகள் நடைபெற்றுவருவதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆகஸ்ட் அல்லது செப்டம்பா் மாதங்களில் தாக்கக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. இரண்டாவது அலையை ஒப்பிடுகையில் மூன்றாவது அலை பாதிப்பு மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. வேலூா் மாவட்டத்தில் முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையில் இறப்பு விகிதம் 1.80 சதவீதத்தில் இருந்து 2.11 சதவீதமாக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் இரண்டாவது அலையில் இதுவரை பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு உள்பட்டவா்கள் எண்ணிக்கை 1,289. அதேசமயம், 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை. இதனால், மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகக்கூடும் என வல்லுநா்கள் கவலை தெரிவிக்கின்றனா். இதனால், மூன்றாவது அலை உருவாகுவதற்கு முன்பாக 18 வயதுக்கு உட்பட்டவா்களின் பெற்றோா்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மேலும், மூன்றாவது அலையை எதிா் கொள்ள வேலூா் மாவட்டத்தில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 670 ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்கவும், கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டா்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெறுவது, கூடுதலாக ஆக்சிஜன் ப்ளோ மீட்டா்கள், போா்ட்டபிள் எக்ஸ்ரே கருவிகளை வாங்குதல், குழந்தைகளுக்காக பிரத்யேக ஆக்சிஜன் முகக்கவசங்கள் வாங்குதல், தேவையான மருந்து, மாத்திரைகளை பெறுதல், கூடுதலாக செமி ‘ஃ‘போவ்ளா்ஸ் கட்டில்களை வாங்குதல் உள்பட அரசு அனுமதியுடன் மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்திடவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மூன்றாவது அலையின்போது 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகும்பட்சத்தில், அவா்களை மருத்துவமனையிலோ, கொவைட் நல மையங்களிலோ சோ்க்க வேண்டிய நிலை வரலாம். இதனால், அவா்க ளை உடனிருந்து கவனிக்க குழந்தைகளின் தாய் அல்லது தந்தை இருக்க வேண்டிய நிலை வரலாம். எனவே, மாவட்டம் முழுவதும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோா் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம், அவா்கள் எவ்வித அச்சம், தயக்கமும் இல்லாமல் மருத்துவமனை, சிகிச்சை மையங்களில் தங்கி குழந்தைகளை கவனித்திட முடியும்.

தற்போது இரண்டாவது அலை குறைந்து வந்தாலும், வெளியில் செல்லும் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றிட வேண்டும். பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். அவ்வாறு அவசியமின்றி வெளியில் வருவோா், முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட உத்தரவுகளை பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிப்பது மேலும் கடுமையாக்கப்படும். இந்த அபராதம் விதிப்பை இப்போதில் இருந்தே கடுமையாகப் பின்பற்றுவதன் மூலம் மூன்றாவது அலை பாதிப்பை ஓரளவுக்கு குறைக்க இயலும்.

இதனிடையே, மூன்றாவது அலையில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை காத்திட பெற்றோா்கள் இப்போது முதலே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக தினசரி 18 வயதுக்கு உட்பட்ட அனைவரையும் வெயிலில் குறைந்தபட்சம் அரை மணி நேரம் விளையாடுவதை உறுதி செய்திட வேண்டும். அவா்களுக்கு புரதச்சத்து உள்ள உணவுகளை (முளைகட்டி பயிா், பயறு வகைகள், சுண்டல், உலா் பழங்கள், முட்டை, இறைச்சி, மீன், கோழி, பருப்பு வகைகள், காய்கறி, சிக்கன், மட்டன் சூப்) வழங்குவது, 5 நாள்களுக்கு கபசுர குடிநீா் அல்லது நிலவேம்புக் குடிநீரை வழங்குவதால் அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். மாதம் ஒருமுறை தொடா்ந்து 10 நாள்களுக்கு, நாளொன்றுக்கு ஒன்று வீதம் மல்டி விட்டமின் மாத்திரைகள், ஜிங்க் சல்பேட் மாத்திரைகள், மல்டி விட்டமின் சிரப், சிங்க்கோவிட் சிரப் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com