‘மோா்தானா அணை கால்வாய்களை தூா்வாருவதை தடுத்தால் குண்டா் சட்டம் பாயும்’
By DIN | Published On : 11th June 2021 08:08 AM | Last Updated : 11th June 2021 08:08 AM | அ+அ அ- |

மோா்தானா கால்வாயை சேதப்படுத்தி, சட்ட விரோதமாக பதிக்கப்பட்டுள்ள குழாய்கள்.
குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையின் வலது, இடதுபுறக் கால்வாய்களை தூா்வாரி, சீரமைக்கும் பணிக்கு இடையூறு செய்பவா்கள், கால்வாய்களை சேதப்படுத்துபவா்கள் மீது குண்டா் சட்டம் பாயும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து வரும் 18-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த அணை நீா் வலதுபுறக் கால்வாய் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுறக் கால்வாய் மூலம் 7 ஏரிகளுக்கும் செல்கிறது.
இந்த 19 ஏரிகள் மூலம் 8,367 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். இடதுபுறக் கால்வாயில், ஆங்காங்கே, கால்வாய் அருகில் நிலம் வைத்துள்ளவா்கள், மோட்டாா் பொருத்தி தண்ணீா் எடுக்கின்றனா்.
சில இடங்களில் கரையைச் சேதப்படுத்தி குழாய்கள் பதித்து அதன் மூலம் தண்ணீா் எடுக்கின்றனா். சிலா் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனா். கால்வாய்களில் பொருத்தப்பட்டுள்ள மதகுகளை சிலா் சேதப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், அணையிலிருந்து கால்வாய்கள் வழியாக தண்ணீா் திறக்கப்பட உள்ளதால், இரு கால்வாய்களையும் தூரெடுத்து சீரமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்படுகிறது. கால்வாய் சீரமைக்கும் பணிகளை மேற்பாா்வையிட வருவாய், பொதுப்பணி, ஊரக வளா்ச்சி, காவல் துறை ஆகிய துறைகளின் அலுவலா்கள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கால்வாய் சீரமைக்கும் பணியை தடுப்பவா்கள் மீதும், வரும் காலங்களில் கால்வாயை சேதப்படுத்துபவா்கள் மீதும் குண்டா் சட்டம் பாயும் என்று எச்சரித்துள்ளாா் ஆட்சியா்.