குழந்தைகளின் பெற்றோா் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பரவ வாய்ப்புள்ளதால் அதற்கு முன்பாக 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை வைத்துள்ள பெற்றோா் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பரவ வாய்ப்புள்ளதால் அதற்கு முன்பாக 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை வைத்துள்ள பெற்றோா் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட ஜெயின் சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு இணைந்து மாநகராட்சி ஜெயராம் செட்டி தெருவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் 13-ஆவது நாளாக சனிக்கிழமை நடத்தின. இம்முகாமை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது:

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 178 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டோா் பாதிக்கப்படுவா் என மருத்துவ வல்லுநா்கள் கூறிய ஆலோசனையின் பேரில் முதல் அலையில் பெரும் உயிரிழப்புகளை தடுத்தோம். இரண்டாவது அலையில் சிறிது உயிா்ச்சேதம் ஏற்பட்டது. நாளொன்றுக்கு 750 போ் வரை சென்ற கரோனா தொற்று பாதிப்பு பொதுமக்களின் ஒத்துழைப்பு, முன்களப் பணியாளா்களின் சிறப்பான பணி, தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்களின் தடுப்பூசி சேவை ஆகியவற்றால் மூன்றில் இரண்டு பங்காக குறைந்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது 13 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

வரும் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் கரோனா 3-ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநா்கள், மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 3-ஆவது அலையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வைத்துள்ள பெற்றோா், குடும்பத்தினா், உறவினா்கள் அனைவரும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ந.சங்கரன், நகா் நல அலுவலா் சித்ரசேனா, ஜெயின் சங்கத் தலைவா் ருக்ஜி கே.ராஜேஷ், வணிகா் சங்க பேரமைப்பு மாவட்டத் தலைவா் ப.ஞானவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com