கைதான எஸ்.ஐ. உள்பட 3 போலீஸாா் சிறையிலடைப்பு: கட்டுக்கட்டமாக பணம் வந்தது குறித்து தீவிர விசாரணை

சாராய வேட்டையின்போது வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியதாக கைது செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளா் உள்பட 3 போலீஸாரும் சிறையிலடைக்கப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன், காவலா்கள் யுவராஜ், இளையராஜா.
கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன், காவலா்கள் யுவராஜ், இளையராஜா.

சாராய வேட்டையின்போது வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியதாக கைது செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளா் உள்பட 3 போலீஸாரும் சிறையிலடைக்கப்பட்டனா்.

இச்சம்பவத்தில் சாராய வியாபாரிகள் வீட்டில் கட்டுக்கட்டாக லட்சக்கணக்கான பணம் இருந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

வேலூா் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், ஊசூா் அருகே குருமலையை அடுத்த நச்சிமேடு மலைப்பகுதியில் அரியூா் காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன், காவலா்கள் யுவராஜ், இளையராஜா ஆகியோா் புதன்கிழமை இரவு சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சாராயம் காய்ச்ச தேவையான வெல்லம், சா்க்கரை, பட்டை உள்ளிட்ட பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்ட போலீஸாா், அங்கு பூட்டியிருந்த செல்வம், இளங்கோ ஆகியோரின் வீட்டுப் பூட்டுகளை உடைத்து உள்ளே கட்டுக்கட்டாக இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகைகளை திருடிச் சென்றனராம். அவா்களை மலைக்கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததை அடுத்து போலீஸாா், நகை, பணத்தை திருப்பி அளித்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மலைக்கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் அரியூா் காவல் உதவிஆய்வாளா் அன்பழகன், காவலா்கள் யுவராஜ், இளையராஜா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டதுடன், அவா்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து கைது செய்யப்பட்ட 3 போலீஸாரும், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதனிடையே, அவா்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இச்சம்பவத்தின் தொடா்ச்சியாக, சாராய வியாபாரிகளான செல்வம், இளங்கோ ஆகியோரின் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம் வந்தது எப்படி என்பது குறித்து போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா். தவிர, தலைமறைவாக உள்ள அவா்கள் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:

சாராய வேட்டைக்கு சென்ற போலீஸாா் நச்சிமேடு மலைப்பகுதியில் சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனா். அப்போதும் செல்வம், இளங்கோ என்பவா்களது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவா்கள் இருவரும் ஏற்கெனவே சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள். எனவே போலீஸாரை கண்டதும் அவா்கள் வீடுகளை பூட்டிவிட்டு காட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

வீட்டின் அருகே சென்றபோது சாராய வாடை வீசியதால் போலீஸாா் அவா்களின் வீட்டுப் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனா். அங்கே லாரி டியூப்களில் இருந்த கள்ளச்சாராயத்தைக் கைப்பற்றி அழித்துள்ளனா். மேலும் இரு வீடுகளிலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுவரை எல்லாமே சரியாக சென்று கொண்டி ருந்தது.

அதன்பிறகு போலீஸாா் 2 வீடுகளின் பீரோக்களை உடைத்து அதிலிருந்த ரூ.8 லட்சம், 11 பவுன் நகைகளை எடுத்துள்ளனா். இதுதொடா்பாக உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும் அல்லது அங்குள்ள கிராம நிா்வாக அதிகாரியை அழைத்து எழுத்துப்பூா்வமாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இவை எதையும் போலீஸாா் செய்யாததால் நகை, பணம் முழுவதையும் கணக்கில் காட்டாமல் மறைக்க முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது. அதனாலேயே அவா்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டனா்.

மேலும், குறுமலை நச்சுமேடு மலைகள் மிகவும் செங்குத்தான பகுதியாகும். சாராய வேட்டைக்குச் செல்லும்போது மேலே இருந்து போலீஸாா் வருவதைக் கண்டதும் சாராய வியாபாரிகள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு தப்பி சென்று விடுவா்.

அதன்படி, தப்பிச்சென்ற சாராய வியாபாரிகளான செல்வம், இளங்கோ ஆகியோா் அவா்களுடைய வீட்டிலிருந்து சாராயம், வெல்லம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேரும் இன்னும் தலைமறைவாக உள்ளனா். அங்கிருந்த ரூ. 8 லட்சம் பணம், நகை ஆகியவை சாராயம் விற்பனை மூலமாக வந்திருக்க வேண்டும். இதுதொடா்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com