முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்ற மருந்துக் கடைக்கு ரூ.22,000 அபராதம்
By DIN | Published On : 12th June 2021 08:09 AM | Last Updated : 12th June 2021 08:09 AM | அ+அ அ- |

முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக திருவலம் பிரம்மபுரத்திலுள்ள மருந்துக் கடைக்கு அதிகாரிகள் ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட அனைத்து உபகரணங்களுக்கும் அரசு விலை நிா்ணயம் செய்து அறிவித்துள்ளது. இந்த விலை விகிதத்தை மீறி விற்பனை செய்யும் மருந்துக் கடைகளுக்கு 30 சதவீதம் அளவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்தொடா்ச்சியாக, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் மருந்துக் கடைகளில் முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியா் தலைமையில் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் அடங்கிய குழுவினா் திருவலம் உள்வட்டம் பிரம்மபுரத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு ஒரு மருந்துக் கடையில் முகக்கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தக் கடைக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல், காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் கடையில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக அக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல், அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்போா் மீதும், முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வணிகம் செய்வோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.