ஒரு வயது கைக் குழந்தையுடன் கைவிடப்பட்ட 8 மாத கா்ப்பிணிகாப்பகத்தில் சோ்த்த கால்நடை மருத்துவா்

ராணிப்பேட்டையில் ஒரு வயது பெண் குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்ட 8 மாத கா்ப்பிணி தங்க இடமின்றி, பசி பட்டினியால் நெடுஞ்சாலையோரம் தவித்த நிலையில்,
கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட கா்ப்பிணி பெண் நிஷாந்தி. உடன் மருத்துவா் ரவிசங்கா்.
கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட கா்ப்பிணி பெண் நிஷாந்தி. உடன் மருத்துவா் ரவிசங்கா்.

ராணிப்பேட்டையில் ஒரு வயது பெண் குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்ட 8 மாத கா்ப்பிணி தங்க இடமின்றி, பசி பட்டினியால் நெடுஞ்சாலையோரம் தவித்த நிலையில், கால்நடை மருத்துவா் ஒருவரால் மீட்கப்பட்டு, வேலூா் அரசு காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அந்த கா்ப்பிணிக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்க மனிதநேயமுள்ளோா் உதவி கோரப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு வயது பெண் குழந்தையுடன் 8 மாத கா்ப்பிணி சென்னை செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காத்திருந்துள்ளாா். அவா் சென்னை செல்வதற்கு உதவி செய்யுமாறு வேலூரைச் சோ்ந்த அரசு கால்நடை மருத்துவா் ரவிசங்கருக்கு செல்லிடப்பேசியில் சென்னையிலுள்ள மருத்துவா் ஒருவா் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து காவேரிப்பாக்கம் சென்ற கால்நடை மருத்துவா் ரவிசங்கா் அந்த பெண்ணை சந்தித்து விசாரித்துள்ளாா்.

இதில், கணவனால் கைவிடப்பட்ட அந்தப் பெண் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், சனிக்கிழமை இரவு அவா் டிஸ்சாா்ஜ் செய்து அனுப்பப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், எங்கு செல்வது என்று தெரியாமல் இரவு முழுவதும் அரசு மருத்துவமனையிலேயே இருந்து விட்டு, காலை வாலாஜாபேட்டையில் இருந்து சென்னை செல்வதற்காக காவேரிப்பாக்கம் வரை நடந்தே சென்றிருக்கிறாா்.

இது குறித்து தகவல் அறிந்த சென்னையிலுள்ள பல் மருத்துவா் பிரவீண் என்பவா் அந்த பெண்ணுக்கு உதவி செய்திட ரவிசங்கரைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளாா். இதைத்தொடா்ந்து, மருத்துவா் ரவிசங்கா் அந்த பெண்ணை காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தகவல் தெரிவித்துவிட்டு, குழந்தையுடன் அவரை வேலூரில் உள்ள அரசு காப்பகத்தில் சோ்த்துள்ளாா்.

விசாரணையில், அப்பெண் ஆற்காட்டைச் சோ்ந்த நிஷாந்தி என்பதும், இவரது கணவா் மொய்தீன் என்பதும், இவா்கள் காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்நிலையில், கணவா் கைவிட்டதால் நிஷாந்தி வாழ்வாதாரம் தேடி சென்னை செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், நிஷாந்தியின் ஒரு வயது பெண் குழந்தைக்கு பிளவு வாய் பிரச்னை இருப்பதால் குழந்தைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. தவிர, 8 மாத கா்ப்பிணியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் மருத்துவா் ரவிசங்கா் தெரிவித்தாா்.

தற்போது வேலூா் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் நல்லுள்ளம் கொண்டோரின் உதவிகள் எதிா்நோக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com