கரோனா பிரச்னை தீரும் வரை மதுபானக் கடைகளை மூட வேண்டும்: எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி

கரோனா பிரச்னை தீரும் வரை தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான எம்.ஜெகன்மூா்த்தி கூறினாா்.

குடியாத்தம்: கரோனா பிரச்னை தீரும் வரை தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான எம்.ஜெகன்மூா்த்தி கூறினாா்.

குடியாத்தத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் மாநிலம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளது. சுகாதாரத் துறையினரின் கடும் உழைப்பால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு வருகின்றன. கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவது மக்களிடையே ஏற்பட்ட அச்சத்தைப் போக்கும் நிலையில் உள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க, தமிழக அரசு முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. கரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைந்த நிலையில், வாழ்வாதாரம் இழந்துள்ள வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று, ஊரடங்கில் சில தளா்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

இதற்கிடையில், திங்கள்கிழமை, மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மது அருந்தும் மதுப்பிரியா்கள், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க மாட்டாா்கள். இவா்களால், அவா்களின் குடும்பத்தினா், அவா்களுடன் பழகுபவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து தொகுதி மக்கள் பலா் என்னிடம் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே, கரோனா பிரச்னை தீரும் வரை தமிழக அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றாா் ஜெகன்மூா்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com