காட்பாடியில் மூதாட்டி வீட்டில் 34 சவரன் தங்க நகை திருட்டு
By DIN | Published On : 22nd June 2021 08:16 AM | Last Updated : 22nd June 2021 08:16 AM | அ+அ அ- |

காட்பாடியில் பூட்டியிருந்த மூதாட்டியின் வீட்டை திறந்து 34 பவுன் தங்கம், கால் கிலோ வெள்ளி என மொத்தம் ரூ.6.90 லட்சம் மதிப்புடைய பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
காட்பாடி காந்திநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சரோஜா(74). இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனா். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த கிருஷ்ணன், கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து, காந்திநகா் வீட்டில் தனியாக வசித்து வந்த சரோஜா, கடந்த 10-ஆம் தேதி முதல் காந்தி நகரிலேயே வேறொரு பகுதியில் உள்ள அவரது மகள் வீட்டில் தங்கியிருந்துள்ளாா்.
இந்நிலையில், பூட்டியிருந்த அவரது வீடு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் சரோஜாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், சரோஜா வந்து பாா்த்தபோது வீட்டின் கதவும், உள்ளே இருந்த பீரோவும் திறக்கப்பட்டு கிடந்துள்ளன. மேலும், பீரோவில் வைத்திருந்த 34 பவுன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளிப்பொருள்கள் என மொத்தம் ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், கைரேகை நிபுணா்களின் தடயஅறிவியல் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. புகாரின் பேரில் விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.