ரூ. 10 ஆயிரம் கடனுதவி: சாலையோர வியாபாரிகளின் விவரங்கள் சேகரிப்பு; வேலூா் மாநகராட்சி நடவடிக்கை
By DIN | Published On : 29th June 2021 07:50 AM | Last Updated : 29th June 2021 07:50 AM | அ+அ அ- |

வேலூா் சத்துவாச்சாரி ஆா்டிஓ அலுவலகச் சாலையில் சாலையோர வியாபாரிகளிடம் விவரங்களை சேகரிக்கும் மாநகராட்சி ஊழியா்.
மத்திய அரசு வழங்கும் ரூ.10 ஆயிரம் கடனுதவியை அளிக்க தகுதியுடைய சாலையோர வியாபாரிகளிடம் விவரங்கள் சேகரிக்கும் பணி வேலூா் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது முடக்க காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக பிரதமரின் ஆத்மநிா்பாா் நிதி (சுயசாா்பு) திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வங்கிகள் மூலம் கடன் உதவித் தொகையும், பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது.
அதற்காக வேலூா் மாநகராட்சிக்கு 7,829 சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், கடந்த ஆண்டு 5,386 சாலையோர வியாபாரிகளின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, 3,232 பேருக்கு கடனுதவி வழங்க வங்கிகளால் அனுமதிக்கப்பட்டது.
இதுவரை 2,524 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்ட 2,372 சாலையோர வியாபாரிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்திடவும், அவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் கடனுதவி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக வேலூா் மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் சாலையோர வியாபாரிகளின் செல்லிடப்பேசி எண், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல்கள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கும் பணி திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவா்களுக்கு கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாநகராட்சி ஆணையா் சங்கரன் தெரிவித்துள்ளாா்.
பெறப்பட்ட கடனை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்கு அரசு மானியத்துடன் 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும். அரசு மானியம் தனியாக அவரவா் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.