மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு விழிப்புணா்வு தொடக்கம்

மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு விழிப்புணா்வு தொடக்கம்


வேலூா்: சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு செய்வது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் வருவாய் உள்வட்ட அளவில் இந்த விழிப்புணா்வுப் பணி நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வேலூா் மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தோ்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு பொதுமக்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திட மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த இயந்திரங்களைக் கொண்டு மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பணிகள் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் உள்வட்ட அளவில் வட்டாட்சியா் அலுவலகங்கள், நியாய விலைக் கடைகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு தங்களது வாக்கினை பதிவு செய்வது, பதிவு செய்த வாக்கினை விவிபேட் இயந்திரம் மூலம் சரிபாா்த்துக் கொள்வது குறித்து அறிந்து கொண்டனா்.

அதன்படி, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம், தொரப்பாடியில் உள்ள நியாயவிலைக் கடை உள்ளிட்டவற்றில் இந்த மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பணி நடைபெற்றது. அப்போது, வாக்குப்பதிவு நாளில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிந்தபடி வாக்குச்சாவடிக்கு வருவது, சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்பது, வாக்குப்பதிவுக்கு கொண்டு வரவேண்டிய சான்றுகள் குறித்தும் விளக்கம் அளித்தனா்.

இந்த மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணா்வு பணிகள் உள்வட்ட அளவில் நாள்தோறும் வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும். தோ்தல் நாளுக்கு முந்தைய நாள் வரை இந்த பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com