கே.வி.குப்பம் அருகே கிராம மக்கள் குடிநீா் கேட்டு சாலை மறியல்
By DIN | Published On : 16th March 2021 12:55 AM | Last Updated : 16th March 2021 12:55 AM | அ+அ அ- |

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கநேரியில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கநேரி ஊராட்சியில், மின்மோட்டாா் பழுது காரணமாக கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் சரிவர இல்லை என்கின்றனா் அப்பகுதி மக்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லாததால், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை கே.வி.குப்பம்- மேல்மாயில் சாலையில், ஆலங்கநேரி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் அவா்களை சமரசம் செய்தனா். குடிநீா் விநியோகம் செய்ய உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.