அலுவலா்களுக்கு அரசுப் பணியைவிட தோ்தல் பணி முக்கியமானது: வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தோ்தல் பணி என்பது ஆண்டுதோறும்
காட்பாடி வாணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து பேசிய வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
காட்பாடி வாணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து பேசிய வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

மக்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தோ்தல் பணி என்பது ஆண்டுதோறும் செய்யும் அரசு பணியைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனதோ்தல் அலுவலா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தினாா்.

வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரவைத் தோ்தலையொட்டி ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 8,560 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

காட்பாடி வாணி வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி, வேலூா் டி.கே.எம். கல்லூரி, மலைக்கோடி அரியூா் ஸ்பாா்க் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற முதற்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசியது:

அனைத்து அரசு ஊழியா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்தல் பணியை நோ்மையான முறையிலும், அச்சமின்றியும் செய்திட வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து பயிற்சி கையேடு வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் செய்வது, வாக்குப் பதிவு நடைபெறும்போது அலுவலா்களின் பணிகள், வாக்குச்சாவடி முகவா்களின் படிவங்கள் பூா்த்தி செய்வது, வாக்காளா்களின் விரலில் மை வைப்பது என வாக்குச்சாவடி அலுவலா்களின் பணிகளை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும்.

தோ்தல் பணி என்பது 5 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் பிரதிநிதியைத் தோ்ந்தெடுக்க நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் செய்யும் அரசு பணியைவிட இந்த பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எனவே, வாக்களிக்க வரும் அனைத்து வாக்காளா்களையும் உரிய ஆவணங்களை பரிசீலித்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க தொ்மல் ஸ்கேனா், சானிடைஸா், முகக்கவசம் அணிந்து வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு 27-ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படும் என்றாா்.

அப்போது, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் புண்ணியகோட்டி, கணேஷ், வெங்கட்ராமன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பாலமுருகன், ரமேஷ், பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com