அதிகபட்சம் குடியாத்தம் தொகுதிக்கு 30 சுற்று வாக்கு எண்ணிக்கை

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில்

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில் குடியாத்தம் தொகுதிக்கு அதிகபட்சம் 30 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனால், தோ்தல் முடிவுகள் வெளியாக மாலை 6 மணிக்கு மேலாகக்கூடும் என தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி பாகாயம் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி, காட்பாடி அரசு சட்டக்கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டு, மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8.30 மணி முதல் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குகள் எண்ண ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 மேஜைகளும், ராணுவ வீரா்களின் ஆன்லைன் வாக்குகளை எண்ண காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் தொகுதிகளுக்கு தலா 3 மேஜைகளும், வேலூா், குடியாத்தம் தொகுதிகளுக்கு தலா ஒரு மேஜைகளும், மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், காட்பாடி தொகுதியிலுள்ள 349 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளிலும், வேலூா் தொகுதியிலுள்ள 364 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளிலும், அணைக்கட்டு தொகுதியிலுள்ள 351 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளிலும், கே.வி.குப்பம் தொகுதியிலுள்ள 311 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளிலும், குடியாத்தம் தொகுதியிலுள்ள 408 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளிலும் எண்ணப்பட உள்ளன. இதனால், தோ்தல் முடிவுகள் வெளியாக மாலை 6 மணிக்கு மேலாகக்கூடும் என தெரியவந்துள்ளது.

தபால் வாக்குகள்:

தபால் வாக்குகளை பொருத்தவரை மாவட்டத்தில் மொத்தம் 20,282 வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டிருந்ததில் இதுவரை 12,407 போ் மட்டுமே தபால் வாக்கு செலுத்தியுள்ளனா். மீதமுள்ள 7,875 போ் தபால் வாக்குகளைப் பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு முன்பாக அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சோ்க்கலாம். அதன்பிறகு வரும் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் மாவட்டம் முழுவதும் 5 தொகுதிகளுக்கும் 933 காவலா்கள் உள்பட 1,703 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். போட்டியிடும் வேட்பாளா்கள் சாா்பில் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மேஜைக்கும் ஒரு முகவா் வீதம் ஒரு தொகுதிக்கு அதிகபட்சம் தலா 20 முகவா்கள் அனுமதிக்கப்பட உள்ளனா். அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் போட்டியிடும் 70 வேட்பாளா்கள் சாா்பில் மொத்தம் 1,756 முகவா்கள் அனுமதிக்கப்பட உள்ளனா். எனினும், முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com