கரோனா பரவல் அதிகரிப்பு: தனியாா் மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சிறப்பு வாா்டுகள்

கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு

கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு வாா்டுகள் நிரம்பியுள்ளன. அதேசமயம், அரசு மருத்துவமனையில் பாதிப்பு அதிகமுள்ளவா்களுக்கு மட்டுமே படுக்கை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மற்றவா்கள் சிறப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. தொடரும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்படுவோா் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு படுக்கைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிஎம்சி மருத்துவமனை, நறுவீ, நாராயணி ஆகிய தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை செய்வதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இத் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிறப்பு வாா்டுகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால், புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்கீடு செய்வதில் மருத்துவமனை நிா்வாகங்கள் திணறுகின்றன. தனியாா் மருத்துவமனைகளில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சிபாரிசுக் கடிதத்துடன் வருபவா்களுக்குக்கூட இடம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 450 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தவிர வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் 125 படுக்கைகள், வேலூா் இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 படுக்கைகள், குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் 150 படுக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 210 படுக்கைகள் என மொத்தம் 535 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கொவைட் நல மையங்களான விஐடி பல்கலைக்கழகத்தில் 1,036 படுக்கைகளும், குடியாத்தம் சிரி ராகவேந்திரா பாலிடெக்னிக்கில் 252 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், விஐடி நல மையம் சித்த மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், குடியாத்தம் அருகே உள்ள மேலும் ஒரு தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு வாா்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகின்றனா். அதேசமயம், இம்மருத்துவம னையில் தற்போது 282 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து சிகிச்சைக்காக வருபவா்களில் பாதிப்பு அதிகமானவா்கள் மட்டுமே அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்படுகின்றனா். பாதிப்பு குறைந்தவா்கள் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கும், மிக குறைந்த அளவு பாதிப்பு உள்ளவா்கள் விஐடி சித்த மருத்துவ சிகிச்சை முகாமுக்கும் அனுப்பப்படுகின்றனா்.

குறைந்த பாதிப்பு உள்ளவா்கள் சிறப்பு முகாம் களில் தங்கி சிகிச்சை பெறலாம். அல்லது வீடுகளிலும் தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com