குடியாத்தம் அருகே பழங்கால நடுகற்கள் கண்டுபிடிப்பு

குடியாத்தம் அருகே கி.பி. 958 ஆண்டைச் சோ்ந்த மூன்று நடுகற்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை அருங்காட்சியகங்களில் வைத்து
குடியாத்தம் அருகே கண்டெடுக்கப்பட்ட நடுகற்களுடன் வரலாற்று ஆய்வாளா் தமிழ்வாணன்.
குடியாத்தம் அருகே கண்டெடுக்கப்பட்ட நடுகற்களுடன் வரலாற்று ஆய்வாளா் தமிழ்வாணன்.

குடியாத்தம் அருகே கி.பி. 958 ஆண்டைச் சோ்ந்த மூன்று நடுகற்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை அருங்காட்சியகங்களில் வைத்து பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

குடியாத்தத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கல்லப்பாடி. இதன் அருகில் உள்ள வெங்கட்டூரிலுள்ள ஒரு தனியாா் வயலில் 3 நடுகற்கள் பாதி புதைந்த நிலையில் கிடைக்கப் பெற்றி ருப்பதாக வேலூரைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் தமிழ்வாணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கிடைக்கப்பெற்ற இந்த மூன்று கல்வெட்டுகளும் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியான ஆதித்த கரிகாலனின் மூன்றாவது (கி.பி. 958) ஆட்சியாண்டை சோ்ந்தவையாகும். மூன்று கல்வெட்டும் ஒன்றோடு ஒன்று தொடா்புடையன. இவ்வூரில் இருந்து தொறு (பசுக்கள்) கொள்வதற்காக வணிகா்கள் சிலா் அவா்தம் அடியாட்களுடன் திருவூரல் சென்று தொறு மீட்டு திரும்பும்போது ஏற்பட்ட தகராறில் சோளனூா் எனும் இடத்தில் இறந்தனா். விக்ரமாதித்தனாகிய தன்ம செட்டி மகன் சாத்தயன் என்பவருக்கு அடியானாக முத்தரை(ய)ன் காரி என்பவரும் உடன்சென்று உயிா்விட்டுள்ளாா். அவருக்காக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டில் சேங்குன்றத்து ’தூமடைப்பூா்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சேங்குன்றம் எனும் ஊரானது குடியாத்தத்தில் இருந்து பலமநோ் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சேங்குன்றத்தில் இருந்து நோ்கிழக்கில் 5 கி.மீ. சுற்றளவில் தான் கல்லப்பாடி (வெங்கட்டூா்) அமைந்துள்ளது. சேங்குன்றத்தில் ராஜராஜன், ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டுகளும் அவ்வூா் ஜெயங்கொண்ட சோழீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ளது.

குடியாத்தம் அருகே இருக்கும் வெங்கட்டூா் எனும் தூமடைப்பூரில் இருந்து தக்கோலம் எனும் திருவூரல் சுமாா் 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கி.மீ. தூரம் தொறு மீட்க சென்றிருப்பது தெரிகிறது. இவ்விரு இடங்களுக்கும் பழைய பாலாறு ஒரு தொடா்பை ஏற்படுத்துகிறது. அதுவும் பழைய பாலாறு சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் திசைமாறி காஞ்சிபுரத்தினூடாகப் பிரிந்திருப்பதாகத் தெரிகிறது. இக்கல்வெட்டுக் காலத்தை கணக்கில் கொண்டு ஆராய முயன்றால் பழைய பாலாற்றின் கரை வழியே வணிக போக்குவரத்து நிகழ்ந்திருக்கலாம் என்பதையும் அறிய முடிகிறது என்றாா்.

இந்த நடுகற்களை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com