வேலூர்: தொகுதிகளைத் தக்க வைத்த 8 எம்எல்ஏக்கள்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 9 தொகுதிகளில் அதிமுக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே மீண்டும் போட்டியிட்டனர்.
வேலூர்: தொகுதிகளைத் தக்க வைத்த 8 எம்எல்ஏக்கள்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 9 தொகுதிகளில் அதிமுக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே மீண்டும் போட்டியிட்டனர். இதில், மற்றற 8 பேரும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ள நிலையில், ஜோலார்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மட்டும் திமுக வசம் தொகுதியை பறிகொடுத்துள்ளார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2016-இல் நடைபெற்றற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி), சோளிங்கர், அரக்கோணம் (தனி) ஆகிய 7 தொகுதிகளில் அதிமுகவும், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, திருப்பத்தூர், ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய 6 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றன.

2016-இல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் பாலசுப்பிரமணியன், சோளிங்கர் என்.ஜி.பார்த்தீபன் ஆகிய 3 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, இந்த 3 தொகுதிகளுக்கும் 2019-இல் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் சோளிங்கர் தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்றிய போதிலும், குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளை திமுகவிடம் இழந்தது. ஆனால், இடைத்தேர்தல் முடிந்து ஓராண்டுக்குள்ளாக குடியாத்தம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி தொடர்ந்து காலியாக இருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றற தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் இம்மூன்று மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), ஆம்பூர், ஜோலார்பேட்டை, ராணிப்பேட்டை ஆகிய 7 தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிட்டன.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக திருப்பத்தூர், ஆற்காடு தொகுதிகளில் திமுகவையும், சோளிங்கரில் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து போட்டியிட்டது. வாணியம்பாடியில் அதிமுகவை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக், அரக்கோணத்தில் அதிமுகவை எதிர்த்து திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள், கே.வி.குப்பத்தில் திமுகவை எதிர்த்து அதிமுகவின் கூட்டணிக் கட்சியான புரட்சி பாரதம் ஆகியவை போட்டியிட்டன.

காலியாக இருந்த குடியாத்தம் தவிர மற்றற 12 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு அந்த தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களான திருப்பத்தூர் நல்லதம்பி (திமுக), ஜோலார்பேட்டை கே.சி.வீரமணி (அதிமுக), ஆம்பூர் வில்வநாதன் (திமுக), வேலூர் ப.கார்த்திகேயன் (திமுக), காட்பாடி துரைமுருகன் (திமுக), அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் (திமுக), ஆற்காடு ஈஸ்வரப்பன் (திமுக), ராணிப்பேட்டை ஆர்.காந்தி(திமுக), அரக்கோணம் சு.ரவி (அதிமுக) ஆகியோர் மீண்டும் போட்டியிட்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்று இவர்கள் தங்கள் தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வார்களா என்பது மட்டுமின்றி, ஏற்கெனவே 2016- இல் வெற்றி பெற்று 2019 இடைத்தேர்தல் மூலம் இழந்த குடியாத்தம், ஆம்பூர் பேரவைத் தொகுதிகளை அதிமுக மீண்டும் கைப்பற்றுமா என்ற கேள்வியும் இம்மாவட்ட மக்களிடையே நிலவி வந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திருப்பத்தூர் நல்லதம்பி (திமுக), ஆம்பூர் வில்வநாதன் (திமுக), வேலூர் ப.கார்த்திகேயன் (திமுக), காட்பாடி துரைமுருகன் (திமுக), அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் (திமுக), ஆற்காடு ஈஸ்வரப்பன் (திமுக), ராணிப்பேட்டை ஆர்.காந்தி(திமுக), அரக்கோணம் சு.ரவி (அதிமுக) ஆகிய 8 சட்டப்பேரவை உறுப்பினர்களும் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

அதேசமயம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மட்டும் திமுக மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ் வசம் தொகுதியை பறிகொடுத்துள்ளார். தவிர, 2019 இடைத்தேர்தல் மூலம் அதிமுக இழந்த குடியாத்தம், ஆம்பூர் பேரவைத் தொகுதிகளையும் திமுக மீண்டும் கைப்பற்றி இருப்பதும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com