வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு

வேலூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொய்வுடனேயே பின்பற்றப்பட்டன.
வேலூா் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சமூக இடைவெளியின்றி அமா்ந்திருந்த முகவா்கள்.
வேலூா் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சமூக இடைவெளியின்றி அமா்ந்திருந்த முகவா்கள்.

வேலூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொய்வுடனேயே பின்பற்றப்பட்டன. இதனால், வாக்கு எண்ணும் மையத்துக்குள் வந்து சென்ற பலருக்கும் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட வேலூா், அணைக்கட்டு தொகுதிகளுக்கு பாகாயம் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி தொகுதிக்கு காட்பாடி அரசு சட்டக் கல்லூரியிலும், குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தனி தொகுதிகளுக்கு குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த மையங்களுக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு 1,200 போலீஸாா், 230 துணை ராணுவப் படையினா் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றன.

தவிர, 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் 770 அலுவலா்கள் உள்பட வேட்பாளா்கள், முகவா்கள் என 4,319 போ் ஈடுபட்டிருந்தனா்.

தற்போது கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாகப் பரவி வருவதை அடுத்து, தோ்தல் ஆணைய உத்தரவின்பேரில், இவா்கள் அனைவருக்கும் முன்கூட்டியே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

இதற்காக வாக்கு எண்ணும் மையத்துக்கு முன்பாக மருத்துவா்கள், செவிலியா்கள் நிறுத்தப்பட்டு ஒவ்வொருவரின் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனா். மையத்துக்குள் செல்லும் அனைவருக்கும் முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகமும் அளிக்கப்பட்டிருந்தன. முகவா்களுக்கு முழு உடல் கவசம் அளிக்கப்படும் என்றும், 3 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. வாக்கு மையத்துக்குள்ளேயே அலுவலா்கள், முகவா்கள் பலரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கொடுக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை முகவா்கள் முறையாக பலரும் பயன்படுத்தாமலேயே வைத்திருந்தனா்.

தவிர, அறைகள் அனைத்தும் மூன்று மணி நேரத்துக்கு ஒரு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில், மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தொய்வுடனேயே பின்பற்றப்பட்டன. இதனால், வாக்கு எண்ணும் மையத்துக்குள் வந்து சென்ற பலருக்கும் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு பாதிக்கப்படுபவா்களை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், அவா்கள் மூலம் மேலும் தொற்று பரவாமல் தடுக்கவும் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட சுகாதாரத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com