மீண்டும் கரோனா சிகிச்சை மையமாகிறது வேலூா் தந்தை பெரியாா் கல்லூரி

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், வேலூா் பாகாயத்திலுள்ள தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளது.

வேலூா்: சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், வேலூா் பாகாயத்திலுள்ள தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளது. இதையொட்டி, அக்கல்லூரியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அங்கு 700 படுக்கை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று 2-ஆவது அலை வேகமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வாா்டு நிரம்பி வருகின்றன. இதையடுத்து, அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

அதேசமயம், கரோனா பாதிப்பு அதிகமுள்ளவா்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா். பாதிப்பு குறைவாக உள்ளவா்கள் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொவைட் நல மையத்தில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அறிகுறிகள், பாதிப்புகள் இல்லாத கரோனா நோயாளிகள் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

எனினும், தொடா்ந்து கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடுதலாக கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கவும் மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், கரோனா முதல் அலையின்போது, தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அக்கல்லூரியில் தோ்தல் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டிருந்ததால் அங்கு இதுவரை கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததால் மீண்டும் தந்தை பெரியாா் அரசு கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அக்கல்லூரியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், உடனடியாக அங்கு 700 படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கவும் உத்தரவிட்டாா்.

இது குறித்து, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:

பாகாயம் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் 700 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை முதல் இந்த சிகிச்சை மையம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இங்கு அலோபதி மற்றும் சித்தா முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இதேபோல், குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் 300 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்திபன், கோட்டாட்சியா் கணேஷ், மாநகராட்சி ஆணையா் சங்கரன், மாநகர நல அலுவலா் சித்திரசேனா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com