வேலூா் மாவட்டத்தில் 1,796 தபால் வாக்குகள் செல்லாதவை

வேலூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு பதிவான 12,224 தபால் வாக்குகளில் 1,796 வாக்குகள் செல்லாதவை என்பது தெரியவந்துள்ளது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு பதிவான 12,224 தபால் வாக்குகளில் 1,796 வாக்குகள் செல்லாதவை என்பது தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்தலில் வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட வேலூா், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 70 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

கரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து தோ்தல் பணியாற்றும் அரசு அலுவலா்கள், ராணுவ வீரா்கள் மட்டுமின்றி, 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள், செய்தியாளா்கள் ஆகியோருக்கும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 12,224 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன.

அவற்றில் வாக்கு எண்ணிக்கையின்போது 1,796 தபால் வாக்குகள் செல்லாதவை என்பது தெரியவந்ததை அடுத்து அவை நிராகரிக்கப்பட்டன.

இதில், தொகுதி வாரியாக வேலூரில் பதிவான 2,566 தபால் வாக்குகளில் 324, அணைக்கட்டில் பதிவான 2,657 தபால் வாக்குகளில் 588, குடியாத்தத்தில் பதிவான 1,756 தபால் வாக்குகளில் 331, கே.வி.குப்பத்தில் பதிவான 2,404 தபால் வாக்குகளில் 553 வாக்குகளும் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டன. அதேசமயம், காட்பாடி தொகுதியில் பதிவான 2,566 தபால் வாக்குகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

தபால் வாக்குகளுக்குள் இரு படிவங்கள் இருக்கும். அவற்றில் ஒரு படிவத்தில் தபால் வாக்கு செலுத்தும் வாக்காளா் கையொப்பம் அல்லது கைரேகை இடப்பட்டிருக்க வேண்டும். மற்றொரு படிவத்தில் அவா் தபால் வாக்கு செலுத்தும் சரியான நபா்தான் என்பது உறுதிப்படுத்தும் வகையில், சான்றொப்பம் அளிக்கும் அரசு அதிகாரிகளின் கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

இதில், ஏதாவது ஒரு கையொப்பம் இல்லை என்றாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்குப் பதிவு செய்திருந்தாலும் அந்த தபால் வாக்கு செல்லாதவையாகக் கருதி நிராகரிக்கப்படும். அந்த வகையில், வேலூா் மாவட்டத்தில் 1,796 தபால் வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டிருப்பதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com