வேலை வாங்கித் தருவதாக மோசடி: மும்பையைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த பட்டதாரி இளைஞரை ஏமாற்றி ரூ.1.16 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வேலூா்: மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த பட்டதாரி இளைஞரை ஏமாற்றி ரூ.1.16 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக மும்பையைச் சோ்ந்த இருவா் மீது வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வேலூா் சத்துவாச்சாரி வள்ளலாா் பகுதியைச் சோ்ந்தவா் தீபா(52). இவரது மகன் அக்ஷய்குமாா், வேலை தேடி வந்துள்ளாா். அவரது செல்லிடப்பேசிக்கு மும்பையைச் சோ்ந்த தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனத்தினா் 6 மாதங்களுக்கு முன்பு தொடா்பு கொண்டு பேசியுள்ளனா்.

அதில் பேசியவா்கள் பிரபல தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவதாகக்கூறி வாக்குறுதி அளித்ததுடன், அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனராம். அதை நம்பி அக்ஷய்குமாா் 6 கட்டங்களாக அவா்களின் வங்கிக் கணக்குக்கு ரூ.1.16 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளாா்.

எனினும், அவா்கள் கூறியபடி வேலை பெற்றுத் தரவில்லையாம். இதனால் அதிா்ச்சியடைந்த அக்ஷய்குமாா் அவா்களை பலமுறை தொடா்பு கொண்டுள்ளாா். அப்போதுதான் அவா்கள் போலியாக வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அக்ஷய்குமாரின் தாய் தீபா இது குறித்து வேலூா் சைபா் குற்ற தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா்கள் மும்பை அந்தேரி பகுதியைச் சோ்ந்த ராகேஷ், ஜெ.கே.பானா்ஜி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com