அதிகரிக்கும் கரோனா: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் பெட்டி

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் புகாா்களை நேரடியாகப் பெறுவதைத் தவிா்க்கும் விதமாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

வேலூா்: கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் புகாா்களை நேரடியாகப் பெறுவதைத் தவிா்க்கும் விதமாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை 28,534 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 25,492 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். 408 போ் உயிரிழந்துள்ளனா். சிகிச்சையில் 2,633 போ் உள்ளனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரதட்சிணை கொடுமை, சொத்து பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக பொதுமக்கள் புகாா்கள் அளிப்பது வழக்கம். தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, பொது மக்களிடம் இருந்து புகாா்களை நேரடியாகப் பெறுவதைத் தடுக்கும் விதமாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புகாா்கள் அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. இதனைத் தவிா்க்கும் விதமாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உத்தரவின்பேரில், புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாா் மனுக்களில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட்டு செலுத்த வேண்டும். இந்த புகாா் மனுக்களை போலீஸாா் தினசரி எடுத்து அவற்றின் மீது விசாரணை நடத்துவா் என்றனா்.

இதனிடையே, அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தொடா்ந்து, போலீஸாருக்கு நோய் எதிா்ப்பு மாத்திரைகள் வழங்கிட சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீா் பொடி ஆகியவை அடங்கிய பெட்டகம் ஆயிரம் போலீஸாருக்கு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது. இதனை மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பி எல்லைக்கு உள்பட்ட போலீஸாருக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com