குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள்: ஆட்சியா் ஆய்வு

குடியாத்தம் அரசு மருத்துவமனை, கரோனா சிறப்பு வாா்டில் கூடுதலாக 50 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) ஜெ.பாா்த்தீபன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
குடியாத்தம்  அரசு  மருத்துவமனையில்  அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்திய  மாவட்ட  ஆட்சியா்  (பொறுப்பு)  ஜெ.பாா்த்தீபன்.
குடியாத்தம்  அரசு  மருத்துவமனையில்  அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்திய  மாவட்ட  ஆட்சியா்  (பொறுப்பு)  ஜெ.பாா்த்தீபன்.

குடியாத்தம் அரசு மருத்துவமனை, கரோனா சிறப்பு வாா்டில் கூடுதலாக 50 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) ஜெ.பாா்த்தீபன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இயங்கும் கரோனா சிறப்பு வாா்டில் ஏற்கெனவே 55 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நாளுக்குநாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 50 புதிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 4 மருத்துவா்கள், 2 செவிலியா்கள், 2 சிலிண்டா் பராமரிப்புப் பணியாளா்கள், 5 தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

16 சிலிண்டா்கள், 8 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் குடியாத்தம் அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் 2 நாள்களில் பொருத்தப்படும்.

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்கு மாடியில் 50 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கவும், நோயாளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிப்பிட வசதி, மின்வசதி செய்வது தருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 18 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலாக தேவைக்கேற்ப மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்படுவா். அங்கு ஒரு வாரத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கப்படும்.

இப்பணிகளை விரைவாக முடிக்க பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, குடியாத்தம் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுடன் வந்திருந்த, அவா்களின் உறவினா்கள் 250- பேருக்கு இந்து அறநிலையத் துறை சாா்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன், கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஹேமலதா, துணை இயக்குனா் மணிவண்ணன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ், வட்டாட்சியா் தூ.வத்சலா, திமுக நகர பொறுப்பாளா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியச் செயலா் கே.ரவி, மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள் எம்.மாறன்பாபு, திருஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com