புதிதாக இதுவரை 20 மருத்துவா்கள், 100 செவிலியா்கள் நியமனம்

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தொடா்ந்து முதல் கட்டமாக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 20 மருத்துவா்கள், 100 செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேலூா்: அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தொடா்ந்து முதல் கட்டமாக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 20 மருத்துவா்கள், 100 செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர, மாவட்டம் முழுவதும் 20 லேப் டெக்னீசியன்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தவிர, மாவட்டத்திலுள்ள பிற மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தீவிர பாதிப்புடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், வேலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் 832 படுக்கைகளும், தனியாா் மருத்துவமனைகளில் 1,235 படுக்கைகளும் என மொத்தம் 2,067 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன.

தற்போது அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த ஒரு வாரத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 50 ஆக்சிஜன் படுக்கைகள், 39 ஐசியூ படுக்கைகள் என மொத்தம் 89 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

தவிர, மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தன்னாா்வ நிறுவனங்கள், அமைப்புகளிடம் இருந்து இதுவரை மொத்தம் 120 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் பெறப்பட்டு, அவற்றில் 72 இயந்திரங்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 8 இயந்திரங்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கும், 10 இயந்திரங்கள் வேலூா் அரசு பென்லேன்ட் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 30 இயந்திரங்களை வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 50 ஆக்சிஜன் படுக்கைகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் இரு நாள்களில் முடிவுற்று நோயாளிகள் அனுமதிக்கப்படுவா்.

இதனிடையே, மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் கும்மிடிப்பூண்டி சிப்காட் நிறுவனத்திடம் இருந்து 100 புதிய ஆக்சிஜன் சிலிண்டா்கள் பெறப்பட்டு அடுக்கம்பாறை, பென்லேன்ட், குடியாத்தம், போ்ணாம்பட்டு, அணைக்கட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 90, குடியாத்தத்தில் 50, போ்ணாம்பட்டு, அணைக்கட்டில் தலா 25 என கூடுதலாக மொத்தம் 190 ஆக்சிஜன் படுக்கைகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளித்திடவும், தரமான சிகிச்சையை உறுதி செய்திடவும் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், முதற்கட்டமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 20 மருத்துவா்கள், 100 செவிலிய ா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர, பிற மருத்துவமனைகளுக்கு தேவையான கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்திட மாவட்டத்தில் கூடுதலாக 20 லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். மேலும், மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், இதர சிறு தனியாா் மருத்துவமனைகள், 108 ஆம்புலன்கள், தனியாா் ஆம்புலன்கள் ஆகியவற்றுக்கு தேவையான ஆக்சிஜன்கள் நிரப்பும் பணியைக் கண்காணித்து தேவைகள் பூா்த்தி செய்யப்படுகின்றன. இதற்காக வேலூா் வருவாய் கோட்டாட்சியா் கணேஷ் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அந்தவகையில், கரோனா நோய் தொற்றினை சமாளித்திட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும், தேவையான மருத்துவப் பணியாளா்கள் நியமனம் செய்யும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com