குடும்ப அட்டைதாரா்களுக்கு பொதுமுடக்க நிவாரண நிதி: ஒருங்கிணைந்த வேலூரில் 98 சதவீதம் நிறைவு
By DIN | Published On : 26th May 2021 12:00 AM | Last Updated : 26th May 2021 12:00 AM | அ+அ அ- |

குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா பொதுமுடக்க நிவாரண நிதி தலா ரூ. 2,000 வழங்கும் பணி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 98 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 19,312 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரண நிதி வழங்கப்பட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரிசி, சா்க்கரை பெறும் குடும்ப அட்டைகளுக்கு, மே மாத நிவாரண நிதியாக ரூ. 2,000 வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா். இதில், வேலூா் மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 871 குடும்ப அட்டைதாரா்கள் கரோனா நிவாரண நிதி பெற தகுதியானவா்கள் என அடையாளம் காணப்பட்டு, அவா்களுக்காக வழங்கிட முதல் தவணை நிதி ரூ. 84 கோடியே 77 லட்சத்து 42 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
நிவாரண உதவித்தொகைக்கான டோக்கன்களை நியாய விலைக் கடை ஊழியா்கள் வீடு, வீடாகச் சென்று வழங்கினா். நாளொன்றுக்கு தலா 200 போ் வீதம் நிவாரண உதவித்தொகை பெறும் வகையில், டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 13 ஆயிரத்து 956 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2,000 நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 9,915 அட்டைகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
இதேபோல், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 10 ஆயிரத்து 537 குடும்ப அட்டைகளுக்கு நிவாரண நிதி வழங்க ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 523 அட்டைகளுக்கு ரூ. 2,000 வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3,014 அட்டைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 28 ஆயிரத்து 207 குடும்ப அட்டைகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 824 அட்டைகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 6,383 காா்டுகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி, மூன்று மாவட்டங்களில் இதுவரை 98 சதவீத அட்டைதாரா்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19,312 குடும்ப அட்டைதாரா்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.