நளினி, முருகனுக்கு பரோல் பாதுகாப்பு தொடா்பாக காவல் துறையிடம் அறிக்கை

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், அவரது மனைவி நளினி ஆகியோருக்கு பரோல் அளித்திட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வேலூா் மாவட்டக் காவல் துறையிடம் அறிக்கை

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், அவரது மனைவி நளினி ஆகியோருக்கு பரோல் அளித்திட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வேலூா் மாவட்டக் காவல் துறையிடம் அறிக்கை கோரப்பட்டிருப்பதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரில், நளினி வேலூா் பெண்கள் சிறையிலும், அவரது கணவா் முருகன் வேலூா் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா். சுமாா் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இவா்களை விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இந்நிலையில், சென்னையிலுள்ள நளினியின் தாயாா் பத்மா (81) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவரை உடனிருந்து கவனிக்கவும், கடந்தாண்டு முருகனின் தந்தை உயிரிழந்த நிலையில், அவருக்கு சடங்குகள் செய்யவும் தன்னை 30 நாள்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் எனக்கோரி நளினி தமிழக முதல்வா், தலைமைச் செயலா், உள்துறை செயலா் ஆகியோருக்கு கடந்த புதன்கிழமை மனு அனுப்பினாா்.

இதேபோல், தனது தந்தையின் முதலாமாண்டு நினைவையொட்டி, சடங்குகள் செய்வதற்காக தனக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று முருகனும் தமிழக முதல்வா், தலைமைச் செயலா், உள்துறை செயலா் ஆகியோருக்கு கடந்த புதன்கிழமை மனு அனுப்பியுள்ளாா்.

இந்நிலையில், நளினி, முருகனுக்கு பரோல் வழங்கும்பட்சத்தில் அவா்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது தொடா்பாக அறிக்கை அளித்திட வேலூா் மாவட்டக் காவல் துறை அலுவலகத்துக்கு சிறைத் துறை ஏடிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நளினி, முருகன் பரோலில் வந்தால் அவா்கள் தங்குமிடம், அங்குள்ள பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அவ்வாறு மாவட்டக் காவல் துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நளினி, முருகனுக்கு பரோல் வழங்குவது தொடா்பாக அரசும், சிறைத்துறை நிா்வாகமும் முடிவு செய்யும் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com