கெளன்டண்யா ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
By DIN | Published On : 06th November 2021 08:08 AM | Last Updated : 06th November 2021 08:08 AM | அ+அ அ- |

மோா்தானா அணையிலிருந்து நொடிக்கு 700 கன அடி உபரிநீா் வெளியேறுவதால், கெளன்டண்யா ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் கூறியது:
மோா்தானா அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணைக்கு நொடிக்கு 700 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு தண்ணீா் அணையிலிருந்து வெளியேறுகிறது. அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் கெளன்டண்யா ஆற்றில் செல்வதால், அதன் கரையோரங்களில் உள்ள ஜிட்டப்பல்லி, ஜங்காலப்பல்லி, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம், அக்ராவரம், பெரும்பாடி மற்றும் குடியாத்தம் நகரப் பகுதியில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.