போலி நகைகள் வைத்து கடன் பெற்றவர்கள் கைது செய்யப்படுவர்: அமைச்சர் துரைமுருகன்

போலி நகைகள், போலி ஆவணங்களை அடகு வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவர்.
விழாவில் பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி.
விழாவில் பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி.

வேலூர்: போலி நகைகள், போலி ஆவணங்களை அடகு வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவர். அதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் 68ஆவது கூட்டுறவு வாரவிழா காட்பாடியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் பங்கேற்று சிறு வணிக கடன், மகளிர் சுய உதவி குழு கடன், வேளாண்மை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் 1,151 பயனாளிகளுக்கு ரூ.10.01 கோடி கடனுதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசியது:

கூட்டுறவுத் துறையில் பணிபுரிபவர்கள் நேர்மையாக பணியாற்றிட வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவர். கூட்டுறவுத் துறையால் பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. கூட்டுறவுத்துறையில் செயல் படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் நல்ல திட்டங்கள் தான். ஆனால், அதனை செயல்படுத்துவதில் தான் பல குறைகள் உள்ளன. அந்தக் குறைகள் களையப்பட வேண்டும். அதற்கு கூட்டுறவுத் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகள், பொறுப்பாளர்களும் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.

கடந்த ஆட்சியில் போலி நகைகள், போலி ஆவணங்களை அடகு வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அவ்வாறு கடன் பெற்றவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவர். அதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கூட்டுறவுத்துறையில் மகளிர் வாங்கிய கடன்களை நேர்மையாக திருப்பி செலுத்தி வருகின்றனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடப்பாண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 87 ஆயிரத்து 443 விவசாயிகளுக்கு ரூ. 617 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக கூறினார். ஐந்து சவரனுக்கு உட்பட்ட கடன் தள்ளுபடியில் 2 லட்சத்து 476 உறுப்பினர்களுக்கு ரூ.160 கோடி அளவுக்கு பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் இறுதிவரை 25 ஆயிரத்து 803 விவசாயிகளுக்கு ரூ.170 கோடி அளவுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் எங்கு ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும். வேலூர் மாவட்டம் அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட ஆட்சியர் உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

விழாவில், மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிர்ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஆட்சியர்கள் பெ.குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கரபாண்டியன் (ராணிபேட்டை) உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com