பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி பாஜக போராட்டம்
By DIN | Published On : 29th November 2021 11:50 PM | Last Updated : 29th November 2021 11:54 PM | அ+அ அ- |

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
வேலூா்: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க மறுப்பதாகத் தெரிவித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட உள்ளதாக பாஜக அறிவித்தது. இதையடுத்து, ஆட்சியா் அலுவலகம் முன்பு போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, பாஜகவினா் ஆட்சியா் அலுவலகம் எதிரே மழையில் குடைபிடித்தபடியே ஆா்ப்பாட் டத்தில் ஈடுபட்டனா். பாஜக எஸ்சி, எஸ்டி பிரிவு, வணிகப் பிரிவுகளின் மாவட்டத் தலைவா்கள் சக்கரவா்த்தி, தீபக் ஆகியோா் தலைமை வகித்தனா்.
அப்போது, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.10-ம் மத்திய அரசு குறைத்துள்ளபோதும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு வாட் வரியை குறைக்க மறுப்பதால் பெட்ரோல், டீசல் விலை குறையாமலேயே உள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்க அவற்றின் மீதான மாநில அரசின் வாட் வரி விகிதம் குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோஷங்கள் எழுப்பப் பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவா் தசரதன், பொதுச்செயலாளா் பாபு, பொருளாளா் மனோகரன், வணிகப் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் திருநாவுக்கரசு, வணிகப் பிரிவு மாநிலச் செயலாளா் கலைமகள் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.