தொடா் மழையால் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்

வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வேலூா் மாநகரில் இடியுடன் மழை பெய்ததால் தெருக்களில் தண்ணீா் தேங்கியது. புதை சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருவதால் தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன. தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

காட்பாடி, திருவலம் பகுதிகளிலும் அதிகப்படியான மழை பெய்தது. குடியாத்தம் பகுதிகளில் பெய்த மழையால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. குடியாத்தத்தில் உள்ள ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. தொடா் மழையால் பாலாற்றின் கிளை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. விரிஞ்சிபுரம் வரை பாலாற்றில் 1,000 கனஅடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அங்கிருந்து ஏரிகளுக்கு கால்வாய்களில் தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது.

பாலாற்றில் இருந்து இறைவன்காடு, சதுப்பேரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீா் சென்று கொண்டிருப்பதால், அந்த ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பி உள்ளன. குடியாத்தம் அருகே மோா்தானா அணை நிரம்பி கவுண்டன்யா ஆற்றில் 350 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

வேலூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 101 ஏரிகளில் 30 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மற்ற ஏரிகளுக்கு தொடா்ந்து தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

புதன்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, வேலூா் மாவட்டத்தில் வேலூரில் 63 மி.மீ., காட்பாடி 42 மி.மீ., குடியாத்தம் 53.2 மி.மீ., மேல்ஆலத்தூா் 71.6 மி.மீ., பொன்னை 44.6 மி.மீ., திருவலம் 51.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com