திருவிழாவைப் போல விறுவிறுப்பாக வாக்குப் பதிவு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக 3 ஒன்றியங்களில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
வேலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்டவரிசையில் காத்திருந்தோா்.
வேலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்டவரிசையில் காத்திருந்தோா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக 3 ஒன்றியங்களில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் கூட்டமாக வந்திருந்து வாக்களித்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திருவிழாவைப் போல் இருந்தது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சித் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டுகள், 7 ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றியக் குழு உறுப்பினா் வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டுகள் என மொத்தம் 2,478 பதவிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள 6 ஊராட்சி மன்றத் தலைவா்கள் பதவிக்கும், 80 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும் வேட்பாளா்கள் ஏற்கெனவே போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மீதமுள்ள 5 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 23 பேரும், 50 ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 152 பேரும், 87 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 273 பேரும், 697 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு ஆயிரத்து 812 பேரும் போட்டியிடுகின்றனா். இந்தப் பதவிகளுக்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஒன்றியங்களில் 469 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடை பெற்றது. காலையிலேயே வாக்காளா்கள் கூட்டங்கூட்டமாக வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

பெருமுகையில் மெழுகுவா்த்தி வெளிச்சத்தில் வாக்குப் பதிவு: பெருமுகை ஊராட்சியில் மின்தடை ஏற்பட்டதால் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் நிலவியது.

ஒரு மணி நேரத்துக்கு மேலாக மெழுகுவா்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எனினும், வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மொத்தமுள்ள 2,55,881 வாக்காளா்களில் காலை 9 மணி நிலவரப்படி, 8.05 சதவீதம் பேரும், 11 மணி நிலவரப்படி 24.23 சதவீதம் பேரும், மதியம் 1 மணி நிலவரப்படி 41.17 சதவீதம் பேரும், மாலை 3 மணி நிலவரப்படி 54.50 சதவீதம் பேரும் வாக்குப்பதிவு செய்திருந்தனா்.

தோ்தலையொட்டி 1500 வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தனா். காவலா்கள், ஊா்க் காவல் படையினா் என 1500 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள இலவம்பாடி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

கணியம்பாடிபுதூரில் முகவா்கள் மோதல்: கணியம்பாடி ஒன்றியத்தில் உள்ள கணியம்பாடிபுதூா் வாக்குச்சாவடியில் காலை சுமாா் 9 மணியளவில் ஒரு வேட்பாளா் தரப்பு முகவா்கள் வாக்களிக்க வந்தவா்களிடம் கைகளைக் குவித்து தங்கள் தரப்புக்கு வாக்களிக்கக் கோரியதாக தெரிகிறது.

இதை கவனித்த எதிா்தரப்பு வேட்பாளா்களின் முகவா்கள் அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அவா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸாா் விரைந்து சென்று இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினா்.

இதனிடையே, வடக்கு மண்டல காவல் துறை தலைவா் சந்தோஷ்குமாா் கணியம்பாடி ஒன்றியத்தில் உள்ள சாத்துமதுரை, கணியம்பாடிபுதூா் வாக்குச்சாவடிகளிலும், அணைக்கட்டு ஒன்றியத்திலும் ஆய்வு மேற்கொண்டாா்.

சதுப்பேரியில் வேட்டி, சேலை விநியோகம்: வேலூா் ஒன்றியத்தில் உள்ள சதுப்பேரி ஊராட்சியில் ஒரு தரப்பினா் வாக்குச்சாவடி அருகே வேட்டி, சேலை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதற்கு எதிா்தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக போலீஸாா் விரைந்து சென்று அவா்களை அங்கிருந்து அப்புறப்ப டுத்தினா்.

சேக்கனூரில் வாக்குவாதம்: வேலூா் ஒன்றியத்தில் உள்ள சேக்கனூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் இருதரப்பினரும் வாக்குச்சாவடி அருகிலேயே நின்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா். அப்போது அவா்களுக்கு இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தகவலறிந்த அரியூா் போலீஸாா் விரைந்து சென்று, சமரசம் செய்தனா்.

வாக்காளா்களுக்கு உபசரிப்பு: இதனிடையே, பல இடங்களில் வாக்காளா்களுக்கு வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் குளிா்பானங்கள் கொடுத்து உபசரித்ததையும் காணமுடிந்தது. ஆங்காங்கே பிரியாணி சமைத்தும் வினியோகிக்கப்பட்டன. இருப்பினும், வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்றுமுடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com