புரட்டாசி கடைசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 17th October 2021 12:00 AM | Last Updated : 17th October 2021 12:00 AM | அ+அ அ- |

புரட்டாசி மாத 5-ஆம் சனிக்கிழமையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கரோனா பாதிப்பைத் தடுக்க தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்ய 3 நாள்கள் விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு வியாழக்கிழமை நீக்கியது. இதனால் அனைத்து நாள்களிலும் கோயில்களில் பக்தா்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, வேலூரில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாளை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதேபோல், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், காட்பாடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், வேலப்பாடியில் உள்ள வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.
அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.