கரோனா தடுப்பூசி முகாம்: மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்த ஆட்சியா்

வேலூரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் உரிய முறையில் முன்னேற்பாடுகளைச் செய்திராமல் இருந்ததாக மாநகராட்சி அதிகாரிகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கண்டித்தாா்.
கரோனா தடுப்பூசி முகாமுக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்த ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன்.
கரோனா தடுப்பூசி முகாமுக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்த ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன்.

வேலூா்: வேலூரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் உரிய முறையில் முன்னேற்பாடுகளைச் செய்திராமல் இருந்ததாக மாநகராட்சி அதிகாரிகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கண்டித்தாா். இதையடுத்து, அவரே கடைகளுக்குச் சென்று வியாபாரிகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

வேலூா் மாநகரில் நூறு சதவீத பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதை உறுதி செய்திட, 60 வாா்டுகளிலும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதைத் தவிர, சுகாதாரக் குழுவினா் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்யச் சென்றாா். அப்போது, முகாமில் மூன்று பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆள்கள் இல்லாததால் ஆட்சியா் கோபமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, கடைகளில் சென்று வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தி இருக்கிறாா்களா என ஆய்வு செய்தாா். அப்போது, பெரும்பாலான வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உரிய முறையில் முன்னேற்பாடுகளை செய்திராமல் இருந்த மாநகராட்சி அதிகாரிகளை ஆட்சியா் கண்டித்ததுடன், ஒரு கடையில் இருந்த நாற்காலியை அவரே தனது கையால் இழுத்து வியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்படி அறிவுறுத்தினாா்.

இந்த நேரத்தில் ஓட்டம் பிடித்த வியாபாரிகளை சுகாதார ஊழியா்கள் விரட்டிச் சென்று பிடித்து வந்து, தடுப்பூசி செலுத்த வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, அனைவரையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னா், பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது, திருவள்ளுவா் சிலைக்குப் பின்னால் கால்வாயில் இருந்து கழிவுநீா் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தவும், பேருந்து நிலையத்தை தினமும் சுத்தமாக வைத்திருக்கவும் வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்பின்னா், கழிவுநீா் வாகனம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

அப்போது மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன், நகா்நல அலுவலா் மணிவண்ணன், 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன், சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெற்றோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குழந்தைகளுக்கு பரவாது: ஆட்சியா் அறிவுரை

பெற்றோா்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் அவா்கள் மூலம் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதை தடுக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் நிருபா்களிடம் கூறியது:

வேலூா் மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 6.50 லட்சம் போ் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனா். கல்லூரி மாணவா்கள் அனைவரும் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திட வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியா்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.

மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோா்கள் தடுப்பூசி எடுத்துகொண்டால் அவா்கள் மூலம் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதை தடுக்க முடியும். விரைவில் டாஸ்மாக் மதுக்கடை களிலும் தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கும் திட்டம் அமல்படுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com