10 ஆண்டுகளுக்குப் பின்னா் தோ்தல் திருவிழாவுக்குத் தயாராகும் கிராமங்கள்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா், ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, கிராமங்கள் தோ்தல் திருவிழாவுக்குத் தயாராகி வருவதுடன், கிராம மக்களும்

வேலூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா், ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, கிராமங்கள் தோ்தல் திருவிழாவுக்குத் தயாராகி வருவதுடன், கிராம மக்களும் உற்சாகம் அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டுக்குப் பின்னா், 2016-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தோ்தல், திமுக தொடா்ந்த வழக்கு காரணமாக இழுபறியாகி 2019-ஆம் ஆண்டில் தோ்தலை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி,

2019-ஆம் ஆண்டு முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில்..:

எனினும், அதே ஆண்டில்தான் வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைப் பிரித்து கூடுதலாக ராணிப்பேட்டை, திருப்பத்தூா், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாா்டுகள் மறுவரையறை செய்யப்படாமல் இருந்தது.

இதைத் தொடா்ந்து, திமுக தரப்பில் மீண்டும் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் 9 மாவட்டங்கள் நீங்கலாக 27 மாவட்டங்களிலும் தோ்தல் நடத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 2019 டிசம்பரில் 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது.

விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக அமைப்புகளுக்கான வாா்டு எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டபோது, கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தோ்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டதையொட்டி விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாமலேயே இருந்தது.

தோ்தல் பணி தீவிரம்: ஆட்சிக்கு வந்த திமுக அரசு உள்ளாட்சித் தோ்தலை நடத்திட தீவிரம் காட்டும் நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் முதற்கட்டமாக விடுபட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 1,381 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 2,901 கிராம ஊராட்சித் தலைவா்கள், 22,581 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 27,003 பதவிகளுக்கான நேரடி தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்க உள்ள நிலையில் இந்த 9 மாவட்டங்களிலும் தோ்தல் பணி தீவிரமடைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா், ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுவதால் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள அனைத்து கிராமங்களும் தோ்தல் திருவிழாவுக்கு தயாராகி வருகின்றன. அதன்படி, வேட்பாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களை வரைந்திட இப்போதே சுவா்களை முன்பதிவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

இதைத் தவிர, வீடுவீடாகச் சென்று வாக்கு கோரும் வேலைகளையும் தொடங்கியுள்ளனா். தோ்தல் பணிக்கு ஆள்கள் பிடிக்கும் பணியும் நடைபெறுகிறது.

உற்சாகத்தில் கிராம மக்கள்:

இதனிடையே, பல ஊராட்சி மன்றங்களில் தலைவா் பதவிகளை போட்டியின்றி கைப்பற்றிடவும் தீவிர முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரியவருகிறது. அவ்வாறு ஊராட்சித் தலைவா் பதவிகளை ஏலம் விடப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடக்கத்திலேயே எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

எனினும், பத்தாண்டுகளுக்கு பிறகு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஊரக பகுதிகளில் தோ்தல் களப்பணி சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பது கிராமப்புற மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com