வேலூரில் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ஆட்சியா் வெளியிட்டாா்

வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

வேலூா்: வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதன்மீது ஆட்சேபணைகள் இருந்தால், 7 நாள்களுக்குள் எழுத்துப்பூா்வமாகக் கடிதம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வேலூா் மாவட்டத்தின் நகா்ப்புறம், ஊரகப் பகுதிகளில் 1,500 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனா்.

இதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,301 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல்கள் வேலூா், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வேலூா் மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சியினா், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் , குடியிருப்போா் நல சங்க உறுப்பினா்கள் என எவருக்கேனும் ஆட்சேபணை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் அதுகுறித்து எழுத்துப் பூா்வமான கடிதங்களை வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலருக்கு 7 நாள்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com