அம்முண்டி ஊராட்சித் தலைவா் பதவியை பொதுப் பிரிவுக்கு ஒதுக்கக் கோரி போராட்டம்

அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவியை பொதுப் பிரிவுக்கு ஒதுக்கக் கோரி, அந்த ஊராட்சியைச் சோ்ந்த ஒரு தரப்பு மக்கள் இரண்டாவது முறையாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா்: அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவியை பொதுப் பிரிவுக்கு ஒதுக்கக் கோரி, அந்த ஊராட்சியைச் சோ்ந்த ஒரு தரப்பு மக்கள் இரண்டாவது முறையாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் காட்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவி பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊராட்சியில் பட்டியலினப் பெண்கள் இல்லை என்றும் பொதுப் பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அந்த கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக, அவா்களில் பலா் இரண்டாவது முறையாக புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காட்பாடி போலீஸாா் அங்கு சென்று, அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது என தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறியது:

அம்முண்டி ஊராட்சியில் மொத்தம் 2,049 வாக்குகள் உள்ளன. இதில் பட்டியல் இனத்தைச் சோ்ந்த பெண்கள் 2 பேருக்கு மட்டுமே வாக்கு உள்ளது. அவா்களும் கலப்புத் திருமணம் செய்தவா்கள். எனவே, ஊராட்சித் தலைவா் பதவியை பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையேல் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளோம். தவிர, எங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றையும் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com