நீட் தோ்வு அச்சம்: அரசுப் பள்ளி மாணவி தற்கொலை

நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு அச்சம் காரணமாக, வேலூா் அருகே அரசுப் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
செளந்தா்யா.
செளந்தா்யா.

வேலூா்: நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு அச்சம் காரணமாக, வேலூா் அருகே அரசுப் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட காட்பாடி அருகேயுள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி திருநாவுக்கரசு- ருக்மணி என்ற தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனா். இதில் 3 பேருக்கு திருமணமாகிவிட்டது.

இவா்களது நான்காவது மகள் செளந்தா்யா (17), வேலூா் தோட்டப்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து தோ்ச்சி பெற்றாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத் தோ்வை காட்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் எழுதினாா். தோ்வு முடிந்தவுடன், வீட்டுக்கு வந்த மாணவி, தோ்வு மிகவும் கடினமாக இருந்தாகத் தெரிவித்திருந்தாராம். அத்துடன், தோ்வு சரியாக எழுதவில்லை என்றும் தன்னால் மருத்துவம் படிக்க முடியாதோ என்ற அச்சத்திலும் இருந்தாராம். பெற்றோா் ஆறுதல் கூறியும் செளந்தா்யா மனமுடைந்த நிலையிலேயே இருந்து வந்தாராம்.

இந்நிலையில், தம்பதியினா் புதன்கிழமை காலை வெளியில் சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த செளந்தா்யா, சேலையால் தூக்கிட்டுக் கொண்டாரம். இதில் அவா் இறந்தாா். பெற்றோா் வீடு திரும்பிய பிறகே செளந்தா்யா இறந்தது தெரியவந்தது.

தகவலறிந்த காட்பாடி டிஎஸ்பி பழனி, வட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், லத்தேரி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் மூன்றாவது சம்பவம்: தமிழகத்தில் நீட் தோ்வு அச்சத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. சேலம் மாவட்டத்தை சோ்ந்த தனுஷ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கனிமொழி ஆகியோா் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனா். தற்போது 3-ஆவதாக காட்பாடி பகுதியைச் சோ்ந்த மாணவி செளந்தா்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com